நான்கு ஆண்டில் ரூ.9,011.45 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றம்: தமிழக அரசு பெருமிதம்
நான்கு ஆண்டில் ரூ.9,011.45 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றம்: தமிழக அரசு பெருமிதம்
ADDED : ஜூன் 09, 2025 01:24 AM

சென்னை: 'தி.மு.க., ஆட்சியில், 1.21 கோடி மக்கள் பயன்பெறும் வகையில், 9,011.45 கோடி ரூபாயில், 71 குடிநீர் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் அறிக்கை:
முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தமிழகம் விரைந்து நகர் மயமாகி வருகிறது. ஊராட்சிகள் பேரூராட்சிகளாகவும், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் வளர்ச்சி பெறுகின்றன.
நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், 'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 6,655.80 கோடி ரூபாயில், 446 பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகள், பூங்கா மேம்பாடு மற்றும் நீர் நிலைகள் புனரமைத்தல் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், 11 மாநகராட்சிகள், 10,639.80 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியின் கீழ், 28 புதிய பஸ் நிலைய பணிகள், 968.08 கோடி ரூபாயில் அனுமதிக்கப்பட்டன.
திருச்சி, நாமக்கல், சங்கரன்கோவில், குளச்சல், தேனி மாவட்டம் கூடலுார் பஸ் நிலையங்கள் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. மற்ற பஸ் நிலைய பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
'அம்ரூத் 2.0' திட்டத்தின் கீழ், 14 மாநகராட்சிகளில், 3,360.64 கோடி ரூபாய் மதிப்பில், பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகின்றன. மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், 4,673.60 கோடி ரூபாய் செலவில், 9,358.10 கி.மீ., நீள சாலைகள் சீரமைக்கப்பட்டு உள்ளன.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், நான்கு பேரூராட்சிகள், 13 நகராட்சிகள், 49 பேரூராட்சிகளில் 10,565 ஊரக குடியிருப்புகளுக்கான, 71 குடிநீர் திட்டங்கள், 9,011.45 கோடி ரூபாயில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. இதனால், 1.21 கோடி மக்கள் பயன்பெறுகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சிகளில், 1,652 பேர் கருணை அடிப்படையில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில், 107.74 கோடி ரூபாயில், குடிநீர் மேம்பாட்டு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.