நீர்ப்பாசனத் துறையை முடக்கிய தமிழக அரசு; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
நீர்ப்பாசனத் துறையை முடக்கிய தமிழக அரசு; விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு
UPDATED : ஏப் 17, 2025 06:37 AM
ADDED : ஏப் 17, 2025 06:17 AM

மதுரை: 'நீர்ப்பாசன துறைக்கான நிதி ஒதுக்கீடு செய்யாமல் முடக்கிவைத்து தமிழக அரசு ஏமாற்றுகிறது' என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
வெளி மாநிலங்களுக்கு கனிமவளம் கடத்துவதற்கு ஆதரவாக லாரிகளை தடை செய்யக்கூடாது என கன்னியாகுமரி கலெக்டர் அழகுமீனா போலீஸ் அதிகாரிக்கு கடிதம் அளித்துள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதுகுறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும். கட்டுமானப்பணிகள் தடையின்றி மேற்கொள்ள மணல் விற்பனையை மாநில அரசு விலை நிர்ணயம் செய்து விற்கவேண்டும்.சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட நீர்மூழ்கி மண் அள்ளும் இயந்திரங்களைக் கொண்டு வைகை அணையை துார் வார வேண்டும்.
வைகை, தாமிரபரணி, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட நீர்ப்பாசன திட்ட பராமரிப்புக்கு நான்காண்டு காலமாக தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை. நெடுஞ்சாலை துறைக்கு கொடுக்கும் முன்னுரிமையை இத்துறைக்கு கொடுக்கவில்லை. மொத்தத்தில் நீர்பாசனத்துறையை முடக்கிவிட்டதால் திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது.
மதுரை ஏ.வி. மேம்பாலம் அருகே கள்ளழகர் வைகையில் இறங்கும் இடத்தில் கழிவுநீர் கால்வாய் கலக்கிறது. வைகையில் 72 இடங்களில் மதுரை மாநகர கழிவுநீர் முழுமையாக கலக்கிறது. உயர்மட்ட குழு அமைத்து கழிவுநீர் தடுப்பதற்கு ஆய்வு செய்ய வேண்டும். தி.மு.க., 2021 சட்டசபை தேர்தல் அறிக்கையில் மதுரையை மையமாக வைத்து புதிய வேளாண் பல்கலைஅமைக்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. குடிமராமத்து திட்டத்தின் மூலம் ஏரி, குளம், குட்டைகளில் விவசாயிகள் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
மாநில கவுரவத் தலைவர் ராமன், தென்மண்டலத் தலைவர் மாணிக்கவாசகம், நிர்வாகிகள் அருண், ஆதிமூலம், அழகு சேர்வை, மணிகண்டன் பங்கேற்றனர்.