ஒரே நாளில் 3 நீதிபதிகளிடம் குட்டு வாங்கிய தமிழக அரசு
ஒரே நாளில் 3 நீதிபதிகளிடம் குட்டு வாங்கிய தமிழக அரசு
ADDED : டிச 04, 2025 07:39 PM

-நமது நிருபர்-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்துாணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில், தவறு மேல் தவறு செய்து, ஒரே நாளில் மூன்று நீதிபதிகளிடம் குட்டு வாங்கியுள்ளது தமிழக அரசு. திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு. அதை அமல் செய்திருக்க வேண்டிய தமிழக அரசு, செய்யாமல் நாடகம் ஆடியது. 144 தடை உத்தரவை காரணம் காட்டி, தீபம் ஏற்ற வந்தவர்களை தடுத்து நிறுத்தியது.நீதிமன்றத்திலும் சொத்தையான வாதங்களை முன் வைத்தது.
விசாரித்த நீதிபதிகள், அதிகாரிகளின் செயல்பாட்டை தங்கள் தீர்ப்பில் வெளுத்து வாங்கி விட்டனர்.
முதலில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்சும், பின்னர் தனி நீதிபதியும் கடுமையான கேள்விகளால் அதிகாரிகளை துளைத்தனர்.
இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், முதலில் அரசின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது. அரசு அதிகாரிகள், நீதிமன்ற அவமதிப்பை தவிர்க்கும் நோக்கத்துடன் திட்டமிட்டு மேல் முறையீடு செய்துள்ளனர் என்றும் நீதிபதிகள் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள், தாங்களாக ஒரு முடிவு எடுத்து செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. மாநில அரசு நிர்வாகம் கூறிய ஆலோசனைப்படியே செயல்பட்டிருக்க வேண்டும். அப்படி செயல்பட்ட அதிகாரிகளுக்கு மிஞ்சியது தலைகுனிவு மட்டுமே.
ஒரு சாதாரண நிகழ்வை, மாநிலம் முழுவதும் அறியும்படியான பிரச்னையாக மாற்றியது அரசின் தவறான செயல்பாடுகளே. சிறுபான்மையினரின் ஓட்டு வங்கி கைவிட்டுப்போய் விடுமோ என்ற அச்சத்திலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்ற சிறு குழுவினரின் வறட்டுப் பிடிவாதப் பேச்சுக்கு பயந்தும், அரசு இப்படி தவறிழைத்துள்ளது.
இதன் மூலம் அரசும், முதல்வரும் சாதித்தது எதுவுமில்லை; சறுக்கியது ஒன்று தான் மிச்சம் என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும் என்கின்றனர், அரசியல் கட்சியினர்.

