24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம்: தமிழக அரசு
24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம்: தமிழக அரசு
ADDED : ஏப் 22, 2025 10:14 PM

சென்னை: தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவும் வகையில், புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் அனந்த் நாக் மாவட்டத்தில் பைசரான் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலாவுக்கு சென்றிருந்த பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த சிலர் காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு கொள்ள ஏதுவாக புதுடில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, 011- 24193300 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 9289516712 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர்(வளர்ச்சி) அப்தாப் ரசூலை நேரடியாக ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்கு சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.