கடிதம் எழுதியதுடன் ஒதுங்கிய தமிழக அரசு: மா விவசாயிகளுக்கு ரூ.150 கோடி நஷ்டம்
கடிதம் எழுதியதுடன் ஒதுங்கிய தமிழக அரசு: மா விவசாயிகளுக்கு ரூ.150 கோடி நஷ்டம்
ADDED : ஜூலை 07, 2025 12:16 AM

சென்னை: மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதோடு, தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டதால், மாம்பழ விவசாயிகளுக்கு 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3.60 லட்சம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஆண்டுதோறும், 9.50 லட்சம் டன் மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன.
அல்போன்சா, மல்கோவா, ருமானி, பங்கனபள்ளி, பெங்களூரா, ஜவாரி, நீலம் உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இவற்றில், பெங்களூரா மாம்பழங்கள், கூழ் தயாரிக்க அதிக அளவில் ஆலைகளில் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த ஆண்டு, இப்பழம் கிலோ, 20 முதல் 30 ரூபாய்க்கு ஆலைகளில் கொள்முதல் செய்யப்பட்டது. நடப்பாண்டு, 4 ரூபாயாக கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஆலைகளில் மாம்பழக் கூழ் அதிகம் தேக்கம் அடைந்துள்ளதால், கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், 2.50 லட்சம் டன் அளவிற்கு, பெங்களூரா ரக மாம்பழங்கள் பயனின்றி வீணாகி உள்ளன. அதிக உற்பத்தி காரணமாக, பங்கனபள்ளி, ஜவாரி, ருமானி மாம்பழங்களுக்கும் உரிய விலை கிடைக்கவில்லை.
இது குறித்து, தமிழக அரசிடம் விவசாயிகள் முறையிட்டனர்; போராட்டங்களிலும் இறங்கினர். உடன், இப்பிரச்னை தொடர்பாக, மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிவ் சவுகானுக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
அதில், மாம்பழங்களுக்கு டன்னுக்கு 7,776 ரூபாய் கொள்முதல் விலை நிர்ணயிக்க வேண்டும். மாம்பழக் கூழ் தயாரிப்பு தொழிற்சாலைகள் வாயிலாக, டன் 5,000 ரூபாய்க்கு மாம்பழங்கள் கொள்முதல் செய்தால், 2,766 ரூபாய் பற்றாக்குறை ஏற்படும்.
இதை, சந்தை தலையிட்டு, விலை திட்டம் வாயிலாக மத்திய - மாநில அரசுகள் பகிர்ந்து, விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அத்துடன் பிரச்னை முடிந்ததாக தமிழக அரசு ஒதுங்கிக் கொண்டது. இதனால், தமிழக மா விவசாயிகளுக்கு, நடப்பாண்டு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் ஜே.ஆஞ்சநேயலு கூறியதாவது:
தமிழகத்தை விட ஆந்திரா, கர்நாடகாவில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் ஆலைகள் அதிகம் உள்ளன. நடப்பாண்டு, அங்கு தமிழக மாம்பழங்களை கொள்முதல் செய்ய தடை போட்டு விட்டனர். தமிழகத்தில் உள்ள ஆலைகளும் இயங்கவில்லை.
இதனால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், மா விவசாயிகளுக்கு 150 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இனியாவது தமிழகத்தில் பொருட்களை மதிப்பு கூட்டும் தொழிற்சாலைகளை அதிக அளவில் அமைக்க வேண்டும். தமிழக அரசு மாம்பழ விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 25,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.
சீசன் முடியும் நேரம் என்பதால், பிரச்னை முடிந்ததாக வேளாண் வணிகப்பிரிவினர் ஒதுங்கி நிற்காமல், விவசாயிகளுக்கு உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.