பறை இசையை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து உலகளவில் சேர்க்க வேண்டும்: தமிழக கவர்னர் ரவி பேச்சு
பறை இசையை அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து உலகளவில் சேர்க்க வேண்டும்: தமிழக கவர்னர் ரவி பேச்சு
ADDED : டிச 13, 2025 05:46 AM

“பறை இசை குறித்து அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, ஆக்கபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும்,” என, தமிழக கவர்னர் ரவி பேசினார்.
விருதுநகர் மாவட்டம், சாத்துார், மேட்டமலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக்கலைஞர் வேலு ஆசானின் பாரதி பறை பண்பாட்டு மையம் திறப்பு விழா நேற்று நடந்தது.
கவர்னர் ரவி கட்டடத்தை திறந்து பேசியதாவது:
இரு ஆண்டுகளுக்கு முன், பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசான், மக்கள் பவனில் என்னிடம், பறை பண்பாட்டு மையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்று, தற்போது வீடுடன் கூடிய பாரதி பறை பண்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.
பறை இசை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. நம் கலாசாரம், பண்பாட்டை பறை இசை உணர்த்துகிறது.
ஆங்கிலேயர்கள் நம் கலாசாரம், பண்பாட்டை அழிக்க முயன்றனர். பறை இசையை காத்த மூதாதையர்கள், நம் தலைமுறைக்கு வழங்கி உள்ளனர்.
நாம் அடுத்தகட்டமாக இளைஞர்களுக்கு கொண்டு சேர்த்து கலாசாரம், பண்பாட்டை பாதுகாக்க வேண்டும். பறை இசை குறித்து அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து, ஆக்கபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும் உலகளவில் கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, பறை இசை கலைஞர்கள் பறை அடித்து கவர்னரை வரவேற்றனர். அவர்களுடன் சேர்ந்து வேலு ஆசானும், கவர்னரும் பறை இசைத்தனர்.
- நமது நிருபர் -:

