அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்
அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம்
ADDED : ஆக 01, 2024 11:05 AM

புதுடில்லி: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்றம், அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என தீர்ப்பளித்தது.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு வழங்கக்கூடாது என, 2005ல், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்த தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இன்று (ஆக.,1) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ''இட ஒதுக்கீட்டின் நோக்கத்தை, உள்ஒதுக்கீடு அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்கிறது. நூற்றாண்டுகளாக ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டு வரும் சமூகங்களுக்கு சம வாய்ப்பை அளிக்க உள் ஒதுக்கீடு வகை செய்கிறது'' எனக் கூறினார்.
இதனையடுத்து 2005ல் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ''பட்டியலின, பழங்குடியினருக்கான உள் ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும். எனவே, அருந்ததியர் உள்ஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும்'' எனத் தீர்ப்பளித்தனர்.