விளையாட்டில் தமிழகத்துக்கு தனி இடம் உண்டு: மோடி பேச்சு
விளையாட்டில் தமிழகத்துக்கு தனி இடம் உண்டு: மோடி பேச்சு
ADDED : ஜன 19, 2024 11:39 PM

சென்னை:'கேலோ இந்தியா' இளையோர் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, பிரதமர் மோடி பேசியதாவது:
சென்னைக்கு வந்துள்ள தடகள வீரர்கள், வீராங்கனையருக்கு என் வாழ்த்துக்கள். அனைவரும் இணைந்து, நீங்கள் ஒரே பாரதம், உன்னத பாரதத்தின் மெய்யான உணர்வை காட்சிப்படுத்துகிறீர்கள். கேலோ இந்தியா விளையாட்டுகள், உங்கள் திறமைகளை வெளிப்படுத்த, ஒரு அரிய வாய்ப்பு; வாழ்வில் மறக்க முடியாத நட்புகளை உருவாக்கும்.
சாம்பியன் பூமி
நாட்டின் விளையாட்டுகளில், தமிழகத்துக்கு ஒரு சிறப்பிடம் உண்டு. இது, சாம்பியன்களை உருவாக்கும் பூமி. இங்கு தான் டென்னிஸ் விளையாட்டில் கொடி கட்டி பறந்த அமிர்தராஜ் சகோதரர்கள், ஹாக்கி அணியின் கேப்டன் பாஸ்கரன் ஆகியோர் பிறந்தனர். இவர்களின் தலைமையில், இந்தியா ஒலிம்பிக் விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றது.
செஸ் விளையாட்டுகளில், சாம்பியன் பட்டங்களை வென்ற விஸ்வநாதன் ஆனந்த், பிரக்யானந்தா, மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக்கில் சாம்பியனான மாரியப்பன் ஆகியோரும், தமிழக மண்ணின் மைந்தர்கள். இப்படி எத்தனையோ சாம்பியன்கள் தமிழ் மண்ணில் பிறந்துள்ளனர்.
ஒவ்வொரு விளையாட்டிலும், தமிழகத்தில் பிறந்தவர்கள், செயற்கரிய செயலை செய்து காட்டியுள்ளனர். எனவே, நீங்கள் அனைவரும், தமிழக மண்ணில் இருந்து உத்வேகம் அடைவீர்கள்.
தலைசிறந்த நாடாக...
அனைவரும் இந்தியாவைஉலகின் தலைசிறந்த விளையாட்டு நாடுகளில் ஒன்றாக பார்க்க விரும்புகிறோம். அதற்கு, இந்த தேசம் பெரிய அளவில் விளையாட்டு போட்டிகளை நடத்த வேண்டும். விளையாட்டு வீரர்களின் அனுபவத்தை ஊக்குவிக்க வேண்டும்.
பெரிய பெரிய விளையாட்டு போட்டிகளில், நம் இளைஞர்கள் பங்கேற்க முன்வர வேண்டும். கேலோ இந்தியா, இளைஞர்களின் இந்த பங்களிப்பை நிறைவேற்றும். சென்னை, திருச்சி, மதுரை, கோவை என, தமிழகத்தின் நான்கு நகரங்களில், நம் சாம்பியன்களை மக்கள் வரவேற்க தயாராக உள்ளனர்.
சிலம்பம் சேர்ப்பு
கேலோ இந்தியா விளையாட்டுகளில், 36 மாநிலங்களின் தடகள வீரர்கள் தங்கள் திறன்களை காட்சிப்படுத்துவர். 5,000த்துக்கும் மேற்பட்டவர்கள் தங்களின் விடாமுயற்சி, உற்சாகம் ஆகியவற்றுடன் மைதானத்தில் இறங்கும்போது, இங்கு என்ன சூழல் நிலவும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
வில்வித்தை, தடகள விளையாட்டு, பேட்மிண்டன் ஆகிய விளையாட்டுகள், உங்களை மகிழ வைக்க காத்திருக்கின்றன. கேலோ இந்தியா விளையாட்டில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்குவாஷ், தமிழகத்தின் பாரம்பரியத்தை காட்டும் மரபுசார் விளையாட்டான சிலம்பம் ஆகியவற்றை மகிழ்ச்சியுடன் காணலாம்.
திருவள்ளுவர்
தமிழக மகான் திருவள்ளுவர் பிறந்த மண் இது. அவர் தன் படைப்புகள் வழியே இளைஞர்களுக்கு புதிய திசையை காட்டியுள்ளார். எனவே, கேலோ இந்தியா விளையாட்டின் சின்னத்தில் திருவள்ளுவர் முகத்தை பார்க்கலாம்.
'அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்; பெருமை முயற்சி தரும்' என, திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது விபரீதமான சூழலிலும் நாம் பலவீனப்பட்டு விடக்கூடாது. கடினங்களை கண்டு ஓடி ஒளியக் கூடாது.
மனதை உறுதியாக வைத்து கொண்டு சாதிக்க தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். ஒரு விளையாட்டு வீரருக்கு இது முக்கிய தேவை.
வேலுநாச்சியார் சின்னம்
இந்த முறை, இளையோர் போட்டிகளின் சின்னமாக, வீரமங்கை வேலுநாச்சியார் ஆக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. வீரத்தின் அடையாளம் அவர். அரசின் பல்வேறு முடிவுகளில், அவரது ஆளுமை பிரதிபலிக்கிறது.
விளையாட்டு வீராங்கனையருக்கு கூட அதிகார பங்களிப்பு கிடைக்க, இந்திய அரசு பணியாற்றி வருகிறது. 20 விளையாட்டுகளில், பெண்கள் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், 50,000 பெண்கள் பங்கெடுத்துள்ளனர்.
ஒலிம்பிக்கை நோக்கி
இப்போது, நம் பார்வை பாரீஸ் நகரில், இந்த ஆண்டு நடக்க உள்ள போட்டிகள், 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்க உள்ள, ஒலிம்பிக் போட்டிகளின் மீதுள்ளது.
இதற்காக, 2014ல் துவங்கப்பட்ட டாப்ஸ் திட்டத்தில், வீரர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறோம். இப்போது இளைஞர்களின் வருகைக்காக விளையாட்டுகள் காத்திருப்பதில்லை. விளையாட்டுகளை இளைஞர்களிடமே நாம் கொண்டு சேர்க்கிறோம்.
வரும், 2029ம் ஆண்டில்,இளைஞர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகள், 2036ம் ஆண்டில், ஒலிம்பிக் விளையாட்டுகள் ஆகியன இந்தியாவில் நடத்த முயற்சித்து வருகிறோம்.
விளையாட்டு பொருளாதாரம்
விளையாட்டுகள் களத்துடன் நின்று விடுவதில்லை. அவை மிகப்பெரிய பொருளாதாரமாகும். இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கு அவற்றில் சாத்தியக்கூறுகள் உள்ளன.
அடுத்த 5 ஆண்டுகளில் உலகின் மூன்றாவது,பெரிய பொருளாதார நாடாக மாற்றுவோம் என, உறுதி அளிக்கிறேன். இதில் விளையாட்டு சார்ந்த பொருளாதாரமும் பங்களிக்க வேண்டும் என்பதே நம் முயற்சி.
கல்வியில் விளையாட்டு
முதல் முறையாக விளையாட்டுக்கான பல்கலைகள் துவங்கப்பட்டுள்ளன. கேலோ இந்தியா இயக்கத்தால், 300க்கும் மேற்பட்ட விளையாட்டு தொடர்பான கல்வி நிறுவனங்கள் துவங்கியுள்ளன. நாட்டின் புதிய கல்வி கொள்கையில், விளையாட்டுகளை முக்கிய பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளோம்.
விளையாட்டு உபகரணங்கள் தயாரிப்பில், இந்தியா தற்சார்பு அடைய வேண்டும் என்பதே விருப்பம். இன்று, 300 வகை விளையாட்டு கருவிகளை தயாரித்து வருகிறோம்.
பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் தங்களின் விளையாட்டு தொடர்பான துறைகளில், தங்களின் தொழில் பாதையை அமைத்து கொள்ள விரும்புகின்றனர். அவர்களது சிறப்பான எதிர்காலத்துக்கு மோடியின் உத்தரவாதம் உண்டு.
விளையாட்டில் மட்டுமல்ல, ஒவ்வொரு துறையிலும், உலகில் இந்தியாவின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. புதிய பாரதம், பழைய பதிவுகளுக்கு முடிவு கட்ட, புதிய உறுதிப்பாடு, புதிய கற்பனை, புதிய உயரங்களை தொட நடை போட துவங்கி விட்டது.
பெரிய இலக்குகளை நிர்ணயிக்கவும், அதை சாதித்து காட்டவும் புதிய பாரத்தில் திறமை இருக்கிறது. நம்மால் முறியடிக்க முடியாத சாதனை எதுவும் கிடையாது. இந்த ஆண்டு புதிய சாதனை படைப்போம்.
நமக்காகவும், உலகுக்காகவும், புதிய வரையறைகளை நிர்ணயிப்போம். நீங்கள் முன்னேறி செல்ல வேண்டும்; உங்களுடன் பாரதம் பயணிக்கும்.
ஒன்று சேருங்கள், நீங்களும் வெல்லுங்கள்; தேசத்தையும் வெற்றி பெற செய்யுங்கள்.
இவ்வாறு பிரதமர் பேசினார்.