ADDED : செப் 20, 2024 02:48 AM
திருச்சி,:''தமிழகம் போதைப் பொருட்கள் நிறைந்த மாநிலமாக மாறி விட்டது,'' என்று முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார்.
திருச்சி மாவட்டம், முசிறியில், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் தலைவர் இளங்கோவனுக்கு சொந்தமான முசிறி தொழில் நுட்பக்கழகத்தில், (எம்.ஐ.டி.,) வேளாண் தொழில்நுட்பக் கல்லுாரி இயங்கி வருகிறது. அந்தக் கல்லுாரியில் ஆயிரம் பேர் அமரும் வகையில், குளிர்சாதன வசதியுடன் ஸ்பெக்ட்ரா கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது. அந்த அரங்கத்தை, நேற்று, முன்னாள் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்துபேசினார்.
அதில், அவர் பேசியதாவது:
ஆட்சி மாற்றத்தினால், வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம் திட்டத்தை செயல்படுத்த முடியாமல் போனது. அடுத்த முறை அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கு வீடு காய்கறி தோட்டம் திட்டம் அமல்படுத்தப்படும், தமிழகத்தில் விவசாயத்தை மேம்படுத்த நீரேற்று திட்டங்கள் அவசியம். தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்க, சேலம் மாவட்டம், தலைவாசலில் ஆயிரம் ஏக்கரில், ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா மற்றும் ஆராய்ச்சி பண்ணை அமைக்கப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், அந்த கால்நடை பண்ணைதிறக்கப்படாமல்உள்ளது. அதனை திறக்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. தி.மு.க., ஆட்சியில், எப்பொழுது மின்சாரம் வரும் போகும் என்ற நிலை உள்ளது. அடிக்கடி மின்சாரம் தடைபடுவதால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்,
தமிழகத்தில் 1,200 கோடி வீதம் விவசாய கடன்களை இரண்டு முறை தள்ளுபடி செய்தது அ.தி.மு.க., அரசு தான். தமிழகம் போதைப்பொருள் நிறைந்த மாநிலமாக மாறிவிட்டது, கல்லுாரி மாணவ மாணவியர் போதை பொருள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். கல்வி தான் அத்தியாவசிம். இளம் வயதில் கல்வியை குறிக்கோளாக கருதி மாற்று பாதைக்கு செல்லாமல் கற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.