'தமிழக தொழில்கள் நசிகின்றன ஸ்டெர்லைட் ஆலையை திறங்கள்': தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
'தமிழக தொழில்கள் நசிகின்றன ஸ்டெர்லைட் ஆலையை திறங்கள்': தொழில் நிறுவனங்கள் கோரிக்கை
UPDATED : ஜூலை 04, 2025 01:10 AM
ADDED : ஜூலை 03, 2025 10:09 PM

சென்னை:'தமிழகத்தில், 1,000 சிறு, குறு தொழிற்சாலைகளை பாதுகாக்க, துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும்' என, தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.
இதுகுறித்து, ஸ்ரீ அன்னம் கெமிக்கல் நிறுவனத்தின் இயக்குநர் கோபால், 'சார்ட்டின் அலாய்ஸ் பிரைவேட் லிமிடெட்' இயக்குநர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர், சென்னையில் அளித்த பேட்டி:
துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையானது, நாட்டின் மொத்த காப்பர் தேவையில், 25 முதல் 30 சதவீதம் தயாரித்து வழங்கியது. உரத்தொழிலுக்கான மூன்று மூலப்பொருட்களும் கிடைத்தன.
இந்த ஆலையை நம்பி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 1,000 சிறு, குறு தொழிற்சாலைகள் இருக்கின்றன. இதனால், ஒரு லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றனர்.
தொழில்கள் பாதிப்பு
இதற்கிடையே, ஸ்டெர்லைட் ஆலையை மூடி, எட்டு ஆண்டுகள் கடந்த நிலையில், மேற்கண்ட தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். துாத்துக்குடியில் இருந்து, காப்பர் ஏற்றுமதி செய்யும் நிலை மாறி, தற்போது இறக்குமதி செய்து வருகிறோம்.
இதன் வழியே, வெளிநாடுகள் வருமானம் ஈட்டுகின்றன. இதனால், சிறு, குறு தொழில்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், அந்நிய செலாவணியும் கணிசமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
சீனா ஏற்றுமதியை குறைத்தது, ரஷ்யா - உக்ரைன் போர் போன்றவற்றால், நம் நாட்டில் உரம் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பருவமழைக்கு முன்பாக, உரத்தின் இருப்பை உறுதி செய்ய வேண்டியது அவசியம். எனவே, சட்டத்துக்கு உட்பட்டு, அனைத்து விதிகள், பாதுகாப்பை உறுதி செய்து, ஸ்டெர்லைட் ஆலையை, மீண்டும் மத்திய, மாநில அரசுகள் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கேரளாவில் புதிதாக துவக்கப்பட்டுள்ள, விழிஞ்ஞம் துறைமுகம், அந்த மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில், முக்கிய பங்காற்றி வருகிறது.
அம்மாநிலத்தில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில், அரசியல் கட்சிகள் ஒற்றுமையாக செயல்படுகின்றன.
ஆனால், தமிழகத்தில் ஸ்டெர்லைட் ஆலை மற்றும் துறைமுகம் உருவாக்க, எதிர்ப்பு தெரிவித்து, கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல கட்சிகள் போராட்டம் நடத்தின.
நடவடிக்கை தேவை
ஆனால், கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கும் கேரளாவில், வளர்ச்சி பணிகளுக்கு எதிராக, கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம் நடத்துவதில்லை.
அதுபோல், குஜராத், ஆந்திரா மாநிலங்களில், அதிக அளவில் புதிய தொழிற்சாலைகள் துவக்கப்படுகின்றன.
தமிழகத்தில், தென் மாவட்டங்களில், புதிய தொழிற்சாலைகள் துவக்க நடவடிக்கை வேண்டும். குளச்சலில் துறைமுகம் அமைக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.