பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் தமிழகம்; டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
பயங்கரவாத செயல்கள் இல்லாத மாநிலம் தமிழகம்; டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உறுதி
ADDED : ஜூலை 11, 2025 11:48 AM

சென்னை: வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று டி.ஜி.பி., சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; கடந்த சில மாதங்களாக ஆபரேஷன் அகலி மேற்கொள்ளப்பட்டது. கோவை மாநகர போலீசாருடன், ஆந்திரா, கர்நாடகா மற்றும் மத்திய அமைப்புகளுடன் இணைந்து, நீண்ட நாள் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
அபு பக்கர் சித்திக் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் இரு வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. 2வது குற்றவாளி முகமது அலி, 1999ல் குண்டு வெடிப்பு சம்பவம் உள்ட 7 வழக்குகள் உள்ளன. ஆந்திராவின் கடப்பாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
3வது டெய்லர் ராஜா. 1996ல் இருந்து 4 வழக்குகள் தொடர்புடையவன். கர்நாடகா போலீசாருடன் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளான். விசாரணை தொடர்ந்து வருகிறது. கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் . வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்குட்படுத்த வேண்டும். அதன்பிறகு, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். ஆனால், முதற்கட்ட விசாரணையிலேயே, தலைமறைவாக இருந்தவர்கள், அந்தந்த ஊரிலேயே டெக்ஸ்டைல்ஸ் உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தனர். மேலும், அடையாள அட்டைகளையும் அடிக்கடி மாற்றி வந்தனர்.
டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளது. மற்ற இருவருக்கும் எந்த அமைப்புடனும் தொடர்பில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர்.
போக்குவரத்து காவலர் செல்வராஜ் கொலை வழக்கில் டெய்லர் ராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. 1996ல் நாகூரில் சைதா கொலை வழக்கு, கோவை ஜெயில் வார்டன் பூபாலன், 1997ல் மதுரை ஜெயிலர் உதவியாளர் ஜெயப்பிரகாஷ் கொலை வழக்கு,1998ல் கோவை குண்டுவெடிப்பு வழக்குள் டெய்லர் ராஜா மீது உள்ளது.
அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளான். அவன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு வழக்கில் 150 அல்லது 160 குற்றவாளிகள் இருக்கும் போது, 2 அல்லது 3 பேர் ரொம்ப நாள் தலைமறைவாக இருந்தாலும், அது வெற்றிகரமான ஆபரேஷன் தான். அதேபோல, ஒரு வழக்கில் தொடர்புடைய 150 பேரும் தலைமறைவாக இருந்தால்தான் அந்த வழக்கில் தோல்வியடைந்து விட்டதாக அர்த்தம், இவ்வாறு அவர் கூறினார்.

