ADDED : அக் 18, 2024 05:41 PM

சென்னை: ''இந்தியாவின் பெருமைமிகு மாநிலம் தமிழகம். இங்கிருந்து ஆன்மிகம் நாடு முழுவதும் சென்றுள்ளது,'' என கவர்னர் ரவி கூறியுள்ளார்.
டிடி தமிழ் தொலைக்காட்சியில் நடந்த ஹிந்தி தின விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது: ஹிந்தி மொழி திணிக்கப்படவில்லை. அனைத்து மொழிகளும் கொண்டாடப்பட வேண்டியவை. தமிழகத்தில் ஹிந்தி கற்க மாட்டார்கள். ஹிந்தி எதிர்ப்பு உள்ளது என்று முன்பு நினைத்து இருந்தேன். கடந்த 3 ஆண்டுகளில் பல பகுதிகளுக்கு சென்ற பின்னர் தமிழகத்தில் ஹிந்தி மொழியை மக்கள் கற்பது தெரிந்தது.
தமிழக மக்கள் இடையே ஹிந்தி மொழியை கற்க வேண்டும் என்ற எண்ணம் மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள பல்கலைகளில் சமஸ்கிருதம் நீக்கப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள 28 மாநிலங்களில் 27 ல் மும்மொழி கொள்கை உள்ளது. தமிழகத்தில் மட்டும் தான் இரு மொழி கொள்கை கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க 50 ஆண்டுகளில் பல முறை முயற்சி நடந்துள்ளது. பிரிக்க நினைக்கும் முயற்சி ஒரு போதும் நிறைவேறாது. இந்தியா எப்போதும் ஒன்றாகவே உள்ளது. எப்போதும் ஒன்றாகவே இருக்கும். இந்தியாவின் பலமான அங்கமாக தமிழகம் எப்போதும் இருக்கும். இந்தியாவின் பெருமை மிகு மாநிலம் தமிழகம். இங்கிருந்து ஆன்மிகம் நாடு முழுவதும் சென்றுள்ளது. தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர். இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.