UPDATED : மார் 19, 2024 05:03 AM
ADDED : மார் 19, 2024 04:42 AM

ஏ.சிரில் சகாயராஜ், திருச்சியிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: குருஷேத்திர போர்க்களத்தில், துரோணரை வெல்ல வேண்டி, ஆயுளில் பொய்யே சொல்லாத தர்மரை, பொய் சொல்ல வைத்தான் கிருஷ்ணன். அது, நாட்டு மக்களின் நன்மைக்காக.
ஆனால், பொறுப்பான பதவியில் அமர்ந்து கொண்டிருப்பவர், தான் பேசும் இடங்களில் எல்லாம், பொய்யை மட்டுமே பேசிக் கொண்டிருந்தால், அவரை என்னவென்று அழைப்பது!
'மத்திய அரசின் திட்டங்களில் எதை நாங்கள் தடுத்தோம்? தமிழகத்தில் செயல்படுத்திய சிறப்பு திட்டங்களை, பிரதமர் பட்டியலிட்டு சொல்ல முடியுமா?' என, பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவை, அரசியல் விழாவாக்கி, முதல்வர் ஸ்டாலின் ஒரு அணுகுண்டை எடுத்து வீசி இருக்கிறார்.
முதல்வரின் இந்த பொய் குற்றச்சாட்டுக்கு, 'தமிழகத்தில், 6 லட்சம் கோடி ரூபாய்க்கு, மத்திய அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது' என்று புள்ளி விபரத்தோடு பட்டியலிட்டு, ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார் பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி.
இங்கு ஒரு உதாரணம் தருகிறேன்...
கடந்த, 1986ல் காங்கிரசின் ராஜிவ் பிரதமராக இருந்தபோது, ஆறு முதல் 11 வகுப்பு வரையிலான ஏழை மாணவ - மாணவியர் அனைவரும் இலவசமாக கல்வி பயில வேண்டும் என்ற காரணத்திற்காக, நாடு முழுதும் நவோதயா பள்ளிகள் துவங்கப்பட்டன.
இவர்களுக்கு அனைத்தும் இலவசம்;பள்ளி பாடங்கள் தவிர, ஒவ்வொரு பிள்ளையின் தனித் திறன்களை கண்டறிந்து, அவற்றில் தேர்ச்சி பெறவும் பயிற்சி அளிக்கப்படும்.
இந்த நவோதயா பள்ளிகளில், தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வர விடாமல் தடுத்தது, நம் 'கழக' அரசு. காரணம் என்ன சொல்லப்பட்டது தெரியுமா... இங்கெல்லாம் ஹிந்தி கற்றுக் கொடுக்கின்றனர் என்று!
அப்படியெனில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை ஏன் தடுக்கவில்லை? தாங்கள் பிசினஸ் செய்வதற்காக!
நவோதயாவின் அனைத்து கொள்கைகளையும் பின்பற்றி, பள்ளியின் பெயரை மட்டும் மாற்றிப் போட்டு, கொள்ளையடிக்க!
சாமானிய மக்களோ, படித்து தேர்ந்து, வாழ்க்கையில் முன்னேறி விடக் கூடாது.
முன்னேறி விட்டால், கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர ஆள் கிடைக்க மாட்டார்கள். போஸ்டர் ஒட்டி பாலபிேஷகம் செய்ய ஆள் கிடைக்காது.
கோஷமிட்டு, கும்மாளமிட்டு கொடி பிடிக்க ஆள் கிடைக்க மாட்டார்கள்.
இந்தக் கணக்கெல்லாம் போட்டதால் தான் இன்று தமிழகம், குடியும், போதையுமாய் 'ஜகஜ்ஜோதியாய்' விளங்குகிறது.

