தமிழகம் சரிவு பாதையில் செல்கிறது: கவர்னர் குற்றச்சாட்டு
தமிழகம் சரிவு பாதையில் செல்கிறது: கவர்னர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 26, 2025 03:15 AM
சென்னை: தமிழகம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக, கவர்னர் ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
குடியரசு தினத்தையொட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும், 2047ல், முழுமையாக வளர்ச்சி அடைந்த, தற்சார்பு நாடாக, இந்தியாவை மாற்ற உறுதி ஏற்றோம். இதை அடைய தமிழக அரசும், அதன் உச்சபட்ச திறமைக்கேற்ப மேம்பட வேண்டும். ஆனால், இது நடப்பது போல தெரியவில்லை.
முக்கியமான குறியீடுகளின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தமிழகம் சரிவுப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
தமிழகம் வளர வேண்டுமானால், இளைஞர்களுக்கு மிக சிறப்பான கல்வியும், திறன்களும் கிடைக்க வேண்டும். மொத்த சேர்க்கை விகிதத்தில், தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருப்பது மிகுந்த நிறைவை அளிக்கிறது.
நமது அரசு பள்ளிகளில், 75 சதவீத மாணவர்களால், இரண்டாம் வகுப்பு பாடப் புத்தகங்களைகூட, சரிவர படிக்க முடியவில்லை. 11 முதல், 99 வரையிலான இரண்டு இலக்க எண்களை கூட, அவர்களால் அடையாளம் காண முடிவதில்லை. இரண்டு இலக்க கூட்டல், கழித்தல்களை, அவர்களால் செய்ய முடியவில்லை.
சிறப்பாக இல்லை
அரசு பள்ளிகளில், பெரும்பாலும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழைகள் படிப்பதால், இந்த சரிவு ஏழைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். உயர் கல்வியிலும் தமிழகத்தின் நிலை சிறப்பாக இல்லை.
பெரும்பாலான பல்கலைகளில், நிதி பற்றாக்குறை நிலவுகிறது. ஆசிரியர்களுக்கு ஊதியம் அளிக்க முடியவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே, மாநில அரசிடமிருந்து பல்கலைகளுக்கு கிடைக்க வேண்டிய நிதி பங்கீடு கிடைக்கவில்லை.
இதனால், பல்கலைகள், 50 சதவீதத்திற்கும் குறைவான ஆசிரியர்களுடன் செயல்படுகின்றன. சென்னை பல்கலையில், 66 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
பல்கலைகளின் தன்னாட்சி முறை தீவிரமாக அழிக்கப்பட்டு, அவற்றை மாநில தலைமை செயலகமே நிர்வாகம் செய்கின்றன. மாநில அரசின் உயர் கல்விக்குழு தயாரிக்கும் தரம் தாழ்ந்த பாடத்திட்டத்தையே பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில், பல்கலைகள் இருக்கின்றன.
நேர்மையான, அப்பழுக்கற்ற பல்கலை அதிகாரிகள், பொய்யான, புனையப்பட்ட வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டு, காவல் துறையின் அவமானகரமான உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். துணைவேந்தர்கள் இல்லாதது, பல்கலையை அரசின் நேரடி கட்டுப்பாட்டுக்கு கொண்டு செல்கிறது.
அற்ப காரணங்களுக்காக, துணைவேந்தர்களை நியமிக்க முடியாமல் செய்வது, பின்வாசல் வழியாக பல்கலைகளின் தன்னாட்சி அதிகாரத்தை சிதைப்பதாகும். இதனால், கல்வித்தரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டு, பட்டதாரிகளுக்கு வேலை கிடைப்பதில்லை.
ஆய்வுகளின் பொதுவான தரநிலைகள் மிக தாழ்ந்த நிலையில் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் நமது பல்கலைகள் உருவாக்கும், 6,000க்கும் மேற்பட்ட முனைவர்களில், ஐந்து சதவீதம் பேரால் கூட, தேசிய தகுதி தேர்வான, 'நெட்', இளநிலை ஆய்வு மாணவர் நிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிவதில்லை.
கல்வி நிறுவன வளாகங்களைச் சுற்றிலும், போதைப்பொருள் அச்சுறுத்தல் கவலை அளிக்கிறது.
சர்வதேச போதைப்பொருள் கூட்டமைப்புகளோடு தொடர்புடைய, போதைப்பொருள் கும்பல்கள், தமிழகத்தில் இயங்கி வருவதாக, அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
பட்டியலின மக்களுக்கு எதிராக, மனிதாபிமானமே இல்லாமல் இழைக்கப்படும் சமூக பாகுபாடுகள் பற்றிய செய்திகளை படிக்கும்போது, நமது தலை அவமானத்தால் தாழ்ந்து போகிறது. தங்கள் காலணிகளை அணிந்து, கிராம தெருக்களில் நடக்க, அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
பொது இடங்களில், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இதைத் தட்டிக் கேட்பவர்கள் கொடூரமாக தாக்கப்படுகின்றனர். அவர்கள் மீது சிறுநீர் கழிக்கப்படுகிறது. சில நேரங்களில் படுகொலை செய்யப்படுகின்றனர்.
பள்ளி வகுப்பறைகளில், பட்டியலின மாணவர்கள் தனிப்படுத்தப்படுகின்றனர். கல்வியில் சிறந்து விளங்கும் பட்டியலின மாணவர்கள் தாக்கப்படுகின்றனர். பட்டியலினத்தவர் பஞ்சாயத்து தலைவராக செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை. அதிகாரப்பூர்வமான கூட்டங்களில், அவர்கள் நாற்காலியில் அமரக்கூட முடிவதில்லை.
கொடுமைகள்
பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள், தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. அவர்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது.
இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா போன்ற தலைவர்கள் வாழ்ந்த மாநிலத்தில், பட்டியலினத்தவர்களுக்கு இத்தகைய கொடுமைகள் நடக்கின்றன.
சில ஆண்டுகள் முன் வரை, தனியார் முதலீட்டாளர்களால் மிகவும் விரும்பப்பட்ட மாநிலமாக, தமிழகம் இருந்தது. இன்று, முதலீட்டாளர்கள் மற்ற மாநிலங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதில், தெலுங்கானா, ஹரியானா மாநிலங்கள் தமிழகத்தை பின்னுக்கு தள்ளியுள்ளன.
நாட்டிலேயே மிக அதிக தற்கொலைகள் நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவின் தற்கொலை தலைநகரம் தமிழகம் என்கின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகளை, என்.ஐ.ஏ., கண்டுபிடித்து செயலிழக்கச் செய்து வருகிறது.
இவற்றில் சில தீவிரவாத குழுக்கள், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு, மேற்காசிய நாடுகளில் இயங்கி வரும் சர்வதேச குழுக்களோடு தொடர்பு கொண்டவை.
தேசிய பாதுகாப்பு பற்றிய மிக மிக தீவிரமான கவலையை அளிக்கும் விஷயம் இது.
இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.