ADDED : ஆக 10, 2024 05:54 PM

ஈரோடு: ‛‛ தமிழகம் பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ளது. தி.மு.க அரசு இதனை கவனிக்க வேண்டும் '', என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ஈரோட்டில் தனியார் சார்பில் வருங்கால தலைமுறையினரின் தொழில் முனைவோருக்கான கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்ற பா.ஜ. மாநில தலைவர் அண்ணாமலை, நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் குறைவாக உள்ளது. ஜி.எஸ்.டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கணிக்க முடியும். 2024ம் காலாண்டில் மஹாஷ்டிரா 15, உத்திரபிரதேசம் 12, கர்நாடக 9 தமிழகம் 3.3 சதவிகதமாக வளர்ச்சி உள்ளது. தமிழகம் பொருளாதார ரீதியாக பின் தங்கி உள்ளது. தி.மு.க அரசு இதனை கவனிக்க வேண்டும். தமிழகம் ஜி.எஸ்.டி மாநில வருவாய் மைனஸ் 11 பாயிண்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது. அப்படி என்றால் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவு நோக்கி சென்று கொண்டு உள்ளது. மற்ற மாநிலங்களின் தொழில் வளர்ச்சி பிரம்மிப்பூட்டும் வகையில் உள்ளது. தமிழகத்தின் நிலை கவலை அளிக்கிறது. தமிழகத்தில் இருந்து மற்ற தொழில் முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி ஆட்சி குறித்து பேச்சு எழுந்துள்ளது.52 சதவிகிதம் ஓட்டு இருந்தால் தனி பெரும்பான்மை ஆட்சியாக கருதப்படும். அந்த காலம் முடிந்து விட்டது. தி.மு.க, அ.தி.மு.க கூட்டணி ஆட்சி என்று சொன்னால் அரசியல் களம் மாறும். 2026ல் தமிழகத்தில் நான்கு போட்டி உள்ளது. எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள், நல்லவர்கள் வெற்றி பெற முடியும். தமிழக அரசியல், 2026 தேர்தலில் மாறும். இவ்வாறு அவர் கூறினார்.