ADDED : செப் 19, 2024 05:56 AM

மதுரை: கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு முதன்முறையாக தமிழகத்தில் செப்டம்பரில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரை விமான நிலையப்பகுதியில் அதிகளவாக நேற்று முன்தினம் 41 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது.
மதுரையில் செப். 3 முதல் 16 வரை குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸாகவும் அதிகபட்சம் 39 டிகிரி செல்ஷியஸாகவும் பதிவானது.
நேற்று முன்தினம் (செப்.17) 40.4 டிகிரியாகவும், மதுரை விமானநிலையப்பகுதியில் 41 டிகிரி, நேற்று (செப்.18) 38 டிகிரி செல்ஷியஸாக பதிவானது.
இதுகுறித்து வானிலை அறிஞர்கள் பல்வேறு விளக்கங்களை தருகின்றனர்.
புயல்களால் ஏற்பட்ட பாதிப்பு
தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையத் தலைவர் சத்தியமூர்த்தி, இணைப் பேராசிரியர் தீபாகரன் கூறியதாவது:
சூரியனின் இயக்கமானது பூமத்திய ரேகையில் மார்ச் 21ல் ஆரம்பித்து ஜூன் 21 ல் கடகரேகையை அடையும். இந்த காலகட்டத்தில் சூரியன் எப்போது பூமியின் வடக்கு அரைகோளத்தில் (பூமியின் மேல் பாதி) தான் இருக்கும்.
அதாவது தமிழகத்தின் மேல் சூரியஒளி நேரடியாக விழும். இதை கோடைகாலம் என்போம். சூரியன் மீண்டும் பூமத்திய ரேகை மேல் செப். 21 வரை இருப்பதால், தமிழகத்தின் மேல் சூரியஒளி நேரடியாக படுவதால் இதை 2வது கோடை காலம் என்போம்.
இப்போது என்ன நடந்தது
கோடையில் 3 முதல் 4 மாதங்களுக்கு (ஜன. முதல் ஏப். வரை) மழை இல்லாததால் வெயில் தாக்கம் கடுமையாக தெரியும். ஆகஸ்டில் தென்மேற்கு பருவமழையால் பூமி கொஞ்சம் ஈரமாகி வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும். 66 ஆண்டுகளுக்கு முன் ஆகஸ்டில் புயல் தோன்றியது போல கடந்த மாதம் வங்காள விரிகுடா, அரேபிய கடல்களில் இரண்டு புயல்கள் உருவாகின. இந்த புயல் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சிவிட்டன.
சூரியன் இன்னமும் வடக்கு அரைகோளத்தில் (செப்.21 வரை) அதாவது தமிழகத்தின் நேர் மேலாக இருக்கிறது. கடந்த 15 நாட்களில் தமிழகத்தில் மழை எங்கும் பதிவாக வில்லை. வெறும் துாறலாக அதிகபட்சம் 5 மி.மீ., அளவுக்கே பெய்துள்ளதால் சூரியஒளியானது பூமியை வேகமாக வெப்பப்படுத்துகிறது.
அதனால் கோடைகாலத்தில் உள்ள வெப்பநிலையை இப்போது நாம் உணர்கிறோம்.
முன்பு மரங்கள் அதிகமாக இருந்தது, வாகனங்கள், கட்டடங்கள் அதிகமாக இல்லை. இப்போது தலைகீழ் மாற்றமாகி விட்டது. காலநிலை மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம்.
மழையிருந்தால் இந்த வெப்பம் உணரப்பட்டிருக்காது. இப்போதுள்ள வானிலை முன்னறிவிப்பின் படி அடுத்த 2 நாட்களுக்குள் திருச்சி, கடலோர மாவட்டங்களில் சாரல் மழை வர வாய்ப்புள்ளது.இவ்வாறு தெரிவித்தனர்.

