ADDED : ஜன 15, 2025 12:30 AM
கமுதி; இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனித் தமிழ்நாடு வாங்கி கொடுப்பேன். பிரதமர் மோடி இதை நிச்சயம் செய்வார். தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் சிந்தனை மன்றம் சார்பில் ஆன்மிக சொற்பொழிவு விழா நடந்தது. விழாவிற்கு வந்த மதுரை ஆதினம் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழர்கள் ஒற்றுமையுடனும் வாழ வேண்டும். தேசியமும் தெய்வீகமும் ஒன்றாக கருதிய தேவர் கொள்கையை கடைபிடிக்க வேண்டும். இலங்கையில் நடந்தது போன்ற ஒரு கொடுமையான சம்பவம் இனி எங்கும் தமிழர்களுக்கு நடக்கக் கூடாது. அங்கு தமிழர்களுக்கு தனி தமிழ்நாடு பெற்று தர வேண்டும் என்பதே லட்சியம்.
விரைவில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளேன். அவரால் இலங்கையில் தமிழர்களுக்கு தனி நாடு வாங்கிக் கொடுக்க முடியும். இந்திரா காலத்தில் கச்சத்தீவை கொடுத்ததால் தான் தற்போது நம் மீனவர்கள் அவதி அடைகிறார்கள்.
மோடி ஆட்சியில் மீனவர்களை இலங்கை சிறையில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழகத்தை தமிழர் தான் ஆள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.