வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்
வரலாற்றுக்கு முந்தைய மனிதர்களின் வாழ்விடம் ஆந்திராவில் கண்டறிந்த தமிழக மாணவர்கள்
ADDED : பிப் 19, 2026 02:43 PM

- நமது நிருபர் -
சென்னை பல்கலையில் படித்த தொல்லியல் துறை மாணவர்கள், ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், திகுவபட்டணம் என்ற ஊரில், 2.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் வாழ்விட பகுதியை கண்டறிந்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை பல்கலையின் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் முன்னாள் மாணவர் சுதர்சன் கூறியதாவது:
சென்னை பல்கலையில் இறுதியாண்டு படித்தபோது, சசிதரன், சஞ்சய், பார்த்திபன், பாரத் ஆகியோருடன் இணைந்து, துறை தலைவர் சவுந்தரராஜன் ஆலோசனையின்படி, ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டோம்.
தொடர்ந்து ஆய்வு செய்ததில், அங்கு கீழை பழங்கற்காலம் எனும், 2.50 லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய கற்கருவிகள் முதல், 5,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பெருங்கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகள் வரையும். காவி மற்றும் வெள்ளை நிற பாறை ஓவியங்களையும் கண்டறிந்தோம்.
அங்கு, 10க்கும் மேற்பட்ட குகை தங்குமிடங்களை அடையாளப்படுத்தி உள்ளோம். அவற்றில் கீழைப் பழங்கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை தொடர்ச்சியாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை கண்டெடுத்துள்ளோம்.
பென்னாற்றங்கரையில் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த, 'குவார்ட்ஸ், குவார்ட்சைட், அகேட், கல்சிடோன்' ஆகிய வகை கற்களால் செய்யப்பட்ட கைக்கோடாரிகள் கிடைத்துள்ளன. காவி மற்றும் வெள்ளை நிற ஓவியங்கள் வரையப்பட்டுள்ள பாறை, 25 மீட்டர் நீளமுடன் உள்ளது. தலை அங்காரத்துடன் மனித உருவங்கள், நடன காட்சிகள், காளை, மான், காண்டாமிருகம், ஆடு, பசு, கழுதை உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள், விவசாயம், வேட்டை உள்ளிட்ட ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
அவை, கால்நடை வளர்ப்பு மற்றும் விவசாயத்தின் பரிணாம நிலைகளை தெளிவுபடுத்துகின்றன. அப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு செய்து, அகழாய்வையும் செய்தால், பல அரிய தகவல்கள் வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

