சைபர் குற்றங்களில் பிற மாநிலங்களை முந்திய தமிழகம் 3 ஆண்டுகளில் 1,759 பேர் சிக்கினர்
சைபர் குற்றங்களில் பிற மாநிலங்களை முந்திய தமிழகம் 3 ஆண்டுகளில் 1,759 பேர் சிக்கினர்
ADDED : அக் 10, 2025 12:02 AM
சென்னை:இணையவழி குற்றங்கள் தொடர்பாக, மூன்று ஆண்டுகளில் கைதான நபர்கள் பற்றி போலீசார் ஆய்வு செய்ததில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.
இணையவழியில் பண மோசடி செய்யும், 'சைபர்' குற்றவாளிகள், புதிய புதிய உத்திகளை கையாண்டு வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், பண மோசடிக்கு முயற்சி செய்யும் வடமாநிலத்தவர், வங்கியில் இருந்து மேலாளர் பேசுவது போல பேசுவர்.
தமிழை அவர்கள் உச்சரிக்கும் விதத்தை வைத்தே, மோசடி நபர்கள் என்பதை அடையாளம் கண்டு கொள்ளலாம்.
மேலும், வடமாநிலங்களில் சைபர் குற்றங்களில் ஈடுபட, பகுதி நேர பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணம் பறிப்பு வட மாநிலத்தவர், மும்பை சி.பி.ஐ., அதிகாரி கள் போல, 'வீடியோ' அழைப்பில் பேசி, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்து இருப்பதாக மிரட்டி, பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தகைய சைபர் குற்றவாளிகள், தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்களைச் சேர்ந்த நபர்களை, கம்போடியா, லாவோஸ், மியான்மர் நாடுகளுக்கு அனுப்பி, சைபர் அடிமையாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையும் தற்போது மாறிவிட்டது. மலேஷியா, சீனாவைச் சேர்ந்த மோசடி கும்பல்கள், தமிழகத்தில் பதுங்கி பயிற்சி அளித்து வருகின்றன.
சமீபத்தில் இக்கும்பலுடன் கூட்டு சேர்ந்து, பண மோசடியில் ஈடுபட்ட, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.
எல்லைகள் கிடையாது சில ஆண்டுகளாகவே, சைபர் குற்றங்களில் ஈடுபடுவதில், மற்ற மாநிலத்தவரை காட்டிலும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இதுபற்றி ஆய்வு செய்ததில், கடந்த மூன்று ஆண்டுகளில், 2,354 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், 1,759 பேர், மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 595 பேர் என, தெரியவந்துள்ளது.
மாநில சைபர் குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் கூறுகையில், ''சைபர் குற்றங்களுக்கு எல்லைகள் கிடையாது. உலகின் எந்த மூலையில் இருந்தும், 'ஆன்லைன்' வாயிலாக குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.
''எங்களுக்கு கிடைக்கும் தகவல்கள், அறிவியல் ரீதியான புலனாய்வு மற்றும் நவீன தொழில்நுட்ப ஆய்வகங்களை பயன்படுத்தி, கைது செய்து வருகிறோம். அதில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக இருப்பது தெரியவந்துஉள்ளது,'' என்றார்.