தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க நிதியின்றி தமிழக அணி வீரர்கள் தவிப்பு
தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்க நிதியின்றி தமிழக அணி வீரர்கள் தவிப்பு
UPDATED : ஏப் 24, 2025 05:36 AM
ADDED : ஏப் 24, 2025 05:34 AM

சென்னை: தேசிய அளவிலான, 20 வயதுக்கு உட்பட்டோருக்கான, 'யூ - 20' சுவாமி விவேகானந்தா கால்பந்து தொடரில், தமிழக அணி பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும், 28ம் தேதி, 'சுவாமி விவேகானந்தா யூ -20' என்ற தேசிய கால்பந்து போட்டி துவங்க உள்ளது. இதில், தமிழகம் சார்பில் பங்கேற்க, கால்பந்து வீரர்கள் தயாராக உள்ளனர்.
இவர்கள் போட்டியில் பங்கேற்க குறைந்தது, 4.50 லட்சம் ரூபாய் செலவாகும். ஆனால், தமிழக கால்பந்து சங்கத்தில் போதிய நிதி இல்லை. எனவே, போட்டியில் வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு, தமிழக கால்பந்து சங்கத்திற்கு எவ்வித நிதியையும் ஒதுக்கவில்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் நிதி உதவி அளிக்கவில்லை என்ற, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குளறுபடி
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில், ஆண்டுதோறும், 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். அதை, மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெற்றுத்தர வேண்டும். ஆனால், தமிழ்நாடு கால்பந்து சங்கத்தில் ஏற்பட்ட குளறுபடி, நீதிமன்ற வழக்கு போன்றவை காரணமாக, நிதி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட கால்பந்து அமைப்பின் செயலர் சண்முகம் கூறியதாவது:
தேசிய அளவிலான, 'யூ-20 சுவாமி விவேகானந்தா கால்பந்து' போட்டியில் பங்கேற்க, அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நிதி வழங்க வேண்டும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக, எந்த நிதியும் வழங்கவில்லை. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளோம். நிதி இல்லாததால், தமிழக அணி போட்டியில் பங்கேற்காது என்று அறிவித்தும், அவர்கள் எந்த உதவியும் செய்ய தயாராக இல்லை.
அரசு உதவி
எனவே, சொந்த செலவில், தமிழக அணியை அழைத்து செல்ல முடிவு செய்துள்ளோம். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் நிதி கேட்டுள்ளோம், அவர்களும் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஒவ்வொரு விளையாட்டிலும், 20 வயதுக்கு உட்பட்ட பிரிவு முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.
அரசு தரப்பில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும், இந்த பிரிவில் சாதிக்கும் வீரர்களுக்கே வழங்கப்படுகின்றன. அரசு பணிகளும், இதில் சாதிக்கும் வீரர்களுக்கே வழங்கப்படும்.
எனவே, எங்கள் சங்கத்தில் இருக்கும் பிரச்னையை சுட்டிக்காட்டாமல், இளம் கால்பந்து வீரர்களின் வருங்காலத்தை கருத்தில் வைத்து அரசு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
'முடிந்த உதவியை செய்வோம்'
இதுகுறித்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு கால்பந்து சங்கத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடியால், சங்கம் இரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் இருந்து நிதி கிடைக்க, அந்த சங்கம் சரியாகச் செயல்பட வேண்டும். அதற்கான தலைவரின் முயற்சியால் மட்டுமே அது சாத்தியமாகும். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு கீழ் செயல்படும், அனைத்து சங்கங்களுக்கும், எல்லா வகையிலும் உதவி செய்யப்படுகிறது.
எங்களால் முடிந்த அனைத்து உதவியையும், நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம். கால்பந்து சங்கத்தில் ஏற்பட்ட குளறுபடியை, நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, எந்த பிரிவுக்கும் சாதகமாக ஆணையம் செயல்படாது. எங்களால் முடிந்த உதவியை செய்வோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

