அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் அமைதியாக இருந்தது: பழனிசாமி
அ.தி.மு.க., ஆட்சியில் தமிழகம் அமைதியாக இருந்தது: பழனிசாமி
ADDED : ஆக 07, 2025 02:05 AM

தென்காசி: ''நான்கு ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் ஒரு மருத்துவக் கல்லுாரி கூட துவக்க முடியாதது ஏன்,'' என அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லுாரில் நேற்று அவர் பேசியதாவது:
தமிழகத்தில் சட்டம் -- ஒழுங்கு என்பதே இல்லை. போலீசாரே கொல்லப்படுகின்றனர். போலீசுக்கே, தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத போது, பொதுமக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்.
கிராமம் முதல் மாநகரம் வரை, இண்டு இடுக்குகளில் எல்லாம் கஞ்சா விற்பனை நடக்கிறது.
இது குறித்து சட்டசபையில் பேசினேன். அதை மறுத்தார் முதல்வர் ஸ்டாலின். இன்று வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் போல இருந்த தமிழக காவல்துறை, இன்று அரசியல் தலையீட்டால் செயலிழந்துள்ளது. காவல்துறையை பல அதிகார மையங்கள் ஆட்டிப்படைப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க., 31 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி செய்தது. அந்தக் காலங்களில் தமிழகம் அமைதியான மாநிலமாக இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில் சிறுபான்மை இனத்தவரும் பாதுகாப்பாக இருந்தனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் 17 மருத்துவக் கல்லுாரிகளை துவக்கினோம். தி.மு.க., ஆட்சியில் ஒன்று கூட இல்லை. தென்காசி கலெக்டர் அலுவலகம், 119 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு உள்ளது. ஆனால், இரண்டு ஆண்டுகளாகியும் திறக்கப்படவில்லை. இது தான் தி.மு.க., ஆட்சியின் லட்சணம்.
இவ்வாறு பழனிசாமி பேசினார்.