மூளை இல்லாத மூடர் கூட்டத்திடம் சிக்கி சீரழியும் தமிழகம் : ஸ்டாலின்
மூளை இல்லாத மூடர் கூட்டத்திடம் சிக்கி சீரழியும் தமிழகம் : ஸ்டாலின்
UPDATED : அக் 13, 2026 07:39 PM
ADDED : அக் 13, 2026 07:36 PM
சென்னை: 'மூளை இல்லாத மூடர் கூட்டத்திடம் சிக்கி, தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
த.வெ.க., ஆட்சி அமைந்த நான்கு மாதங்களில், பண வீக்கம், விலைவாசி உயர்வில், தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது. ஆட்சியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் வைக்க தெரியவில்லை என்றால் கூட பரவாயில்லை. ‘விலைவாசி உயரவே இல்லை’ என, உணவுத்துறை அமைச்சர் சொல்லும் வடிகட்டிய பொய்யைக் கேட்டுத்தான், மக்கள் இன்னும் எரிச்சலில் உள்ளனர்.
மின் வெட்டு குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும், கடந்த பல மாதங்களாக எச்சரித்தோம்; அப்போதே சுதாரித்து உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ‘அ.தி.மு.க.,வில் இருந்து மேலும் 15 பேரை வாங்க போகிறோம்’ என, வெட்கமே இல்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றனர். அதற்கு பணம் போதாமல் தான், மின்சாரம் வாங்குவதில் ஊழல் நடக்கிறதா என, மக்கள் மனதில் கேள்விகள் எழுகின்றன.
ஜோசியரின் பேச்சை கேட்டு, மேட்டூர் அணையையும் தவறான தேதியில் திறந்தனர். இப்போது, சம்பா சாகுபடியும் சாத்தியமாகுமா என தெரியாமல், கடைமடை விவசாயிகள் நீரின்றி தவிக்கின்றனர்.
முன்யோசனையும், மூளையும் இல்லாத, ஒரு மூடர் கூட்டத்திடம் சிக்கி, நம் கண் முன்னே தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது. முதல்வரோ உடுப்பி, லண்டன், விஜயவாடா என, மாதம் ஒரு ஊருக்கு சென்று, விழாவை சிறப்பிப்பதிலேயே குறியாக உள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தின் அடிப்படை கூட அறியாத, இந்த அறிவிலிகளின் அலட்சியத்தால், எதிர்வரும் மாதங்களை தமிழக மக்கள் எப்படி எதிர்கொள்ள போகின்றனரோ என்ற அச்சமே மேலோங்குகிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
