வெளிநாடு செல்லும் அளவுக்கு தமிழக கல்வித்தரம்: மகேஷ்
வெளிநாடு செல்லும் அளவுக்கு தமிழக கல்வித்தரம்: மகேஷ்
ADDED : அக் 01, 2025 08:14 AM

திருச்சி; ''உங்களுக்கு பிடித்த தலைவர் பின்னால் போங்கள்; நாங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை,'' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் கூறினார்.
திருச்சியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த செப்., 1ம் தேதி ஆசிரியர்களுக்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது, வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணியில் சேர்ந்தவர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளனர். இது இந்தியா முழுதும் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தீர்ப்பு வந்ததும், அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் அழைத்து ஆலோசித்து, மறுசீராய்வு மனு செய்யலாம் என முடிவு செய்து மறு சீராய்வு செய்து விட்டோம்.
ஆசிரியர்களை நாங்கள் பாதுகாப்போம். மாணவர்கள் கல்வியில் ஆசிரியர்கள் கவனம் செலுத்த வேண்டும். கரூர் சம்பவத்தில் வரும் விமர்சனங்கள் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக உள்ளது. இதுதொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
நான் நாகையில் இருந்து வரும்போது தான், கரூரில் இப்படியொரு மோசமான சம்பவம் நடந்துவிட்டதாக தகவல் வந்தது. அதன்பின், இரவு 10:00 மணிக்கு கரூர் சென்றேன். நான் மார்ச்சுவரிக்கு சென்றபோது, பள்ளி மாணவர்களை இறந்த நிலையில் கொண்டு வந்தனர். அதைப் பார்த்ததும் கலங்கி விட்டேன்; இதைக் கூட எதிர்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
தமிழக அரசு, மாணவர்களுக்கு கல்வித் துறையில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் வரையிலான திட்டங்களை, அதிக அளவில் கொண்டு வந்திருக்கிறது. அதை பயன்படுத்தி, ஒவ்வொருவரும் தங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
இதனால், யாரையும் தி.மு.க.,வுக்கு ஆதரவு கொடுங்கள் என கேட்கவில்லை.
மக்கள் நாலாபுறம் இருந்தும் அறிவு சார்ந்த கருத்துகளை உள்வாங்கி, யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிக்கட்டும். உங்களுக்கு பிடித்த தலைவர்கள் பின்னால் போங்கள்; வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், உயிர் ரொம்ப முக்கியம்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.