தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு
தமிழக மின் நுகர்வு ஓராண்டில் 742 கோடி யூனிட்கள் அதிகரிப்பு
ADDED : நவ 24, 2024 06:07 AM

சென்னை: தமிழக மின் நுகர்வு, 2023 - 24ல் 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதற்கு 'ஏசி' சாதனங்கள், மின்சார வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பே காரணங்களாக அமைந்துள்ளன.
தமிழகத்தில் வீடு, தொழிற்சாலை உட்பட அனைத்து பிரிவுகளுக்கும் மின் வினியோகம் செய்யும் பணியை மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. மாநிலம் முழுதும் ஒரு நாள் அதாவது 24 மணி நேரமும் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவு மின் நுகர்வு எனப்படுகிறது.
தினமும் சராசரியாக, 30 கோடி யூனிட்களாக உள்ள மின் நுகர்வு, கோடை வெயிலால் இந்தாண்டு ஏப்ரல், 30ல், 45.43 கோடி யூனிட்களாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது.
சமீப காலமாக, சுற்றுச்சூழல் மாசு அடைவதை தடுக்கவும், பெட்ரோல் மற்றும் டீசலால் ஏற்படும் செலவை குறைக்கவும் பலரும், இ.வி., எனப்படும் மின்சாரத்தில் ஓடும் பைக், கார்களை வாங்கி வருகின்றனர்.
இந்தாண்டு தமிழகம் உட்பட நாடு முழுதும் லோக்சபா தேர்தல் நடந்தது. தமிழகத்தில் ஏப்ரல், 19ல் தேர்தல் நடந்ததால், மார்ச்சில் தேர்தல் பிரசாரம் நடந்தது.
அம்மாதம் வெயில் கடுமையாக சுட்டெரித்தால் வீடு, அலுவலகங்களில், 'ஏசி' சாதனங்களின் பயன்பாடு வழக்கத்தை விட மிகவும் அதிகம் இருந்தது.
இதுபோன்ற காரணங்களால், கடந்த மார்ச்சுடன் முடிவடைந்த, 2023 - 24ம் நிதியாண்டில், தமிழக மின் நுகர்வு, 11,096 கோடி யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதுவே, 2022 - 23ல், 10,354 கோடி யூனிட்டாக இருந்தது. கடந்த ஆண்டில் மட்டும் கூடுதலாக, 742 கோடி யூனிட்கள் உயர்ந்துள்ளது.