அடுத்த ஆண்டு முதல் கணினி வழியே தமிழ் தட்டச்சு பயிற்சி
அடுத்த ஆண்டு முதல் கணினி வழியே தமிழ் தட்டச்சு பயிற்சி
ADDED : ஜூலை 09, 2026 12:20 AM
சென்னை: தமிழக உயர்கல்வித் துறையின், தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அங்கீகாரத்துடன், மாநிலம் முழுதும், 4,678 தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. தட்டச்சு இயந்திரங்களுக்கு பதிலாக, கணினி வழியே தட்டச்சு பயிற்சி வழங்கிட, அனைத்து பயிற்சி நிறுவனங்களுக்கும், தொழில்நுட்ப இயக்ககம், சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவுறுத்தியது.
இதற்கு, தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, அதற்கான கால அவகாசம் 2028ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த சூழலில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், வணிகவியல் பள்ளிகளின் சங்கங்களுடன், தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் கலந்து ஆலோசனை நடத்தினர்.
அதன்படி, பழைய தட்டச்சு இயந்திர விசைப்பலகையில், தமிழ் தட்டச்சு பயிற்சி மேற்கொண்ட தேர்வர்களுக்கு மட்டும் 2027ம் ஆண்டு வரை, கால நீட்டிப்பு வழங்கி, தொழில்நுட்ப கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், 2027ம் ஆண்டு முதல், புதிதாக கணினி வழியில், தமிழ் தட்டச்சு பயிற்சியை தொடங்கும் தேர்வர்கள், 'தமிழ் 99' விசைப்பலகை வழியே மட்டுமே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
