ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
ஆண்டாள் கோலத்தில் தமிழச்சி; எதிர்பாராததை எதிர்பாருங்கள்!
ADDED : டிச 16, 2025 06:36 PM

சென்னை: ஆண்டாள் கோலத்தில் திமுக எம்.பி., தமிழச்சி போஸ் கொடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள படம், கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.
திமுக எம்பியான தமிழச்சி தங்கப்பாண்டியன் தென்சென்னை தொகுதியில் 2019 முதல் எம்பியாக இருந்து வருகிறார். சென்னை ராணி மேரி கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், இலக்கியம் மீது ஆர்வம் கொண்டதுடன், கவிதை, கட்டுரைகளை எழுதியுள்ளார். திமுகவின் கொள்கைகளை பரப்பியும், அதற்கு ஆதரவாக வாதங்களை முன் வைத்தும் பொதுக்கூட்டங்களிலும், பார்லிமென்டிலும் பேசக்கூடியவர்.
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் திமுக அரசை பாஜ, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஹிந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில், மார்கழி மாத துவக்கத்தை முன்னிட்டு தமிழச்சி தங்கப்பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண்டாள் வேடத்தில் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அத்துடன், 'அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்குப் பன்னு திருப்பாவை பல்பதியம் -
இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை பாடி அருளவல்ல பல்வலையாய் -
நாடி நீ வேங்கடவர்க்கு என்னை விதி என்ற இம்மாற்றம் நாம் கடவா வண்ணமே நல்கு. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!' என்ற திருப்பாவை பாடலையும் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் தமிழச்சி தங்கப்பாண்டியனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
பாஜ பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி வெளியிட்ட அறிக்கையில், ' தமிழச்சியின் ஆண்டாள் வேடம். இதை நான் எதிர்பார்க்கவில்லை. வரவேற்கிறேன். தமிழச்சி போல திமுகவில் மற்றோரும் சனாதன வெறுப்பை கைவிட்டு தமிழுக்கும் ஹிந்து தர்மத்துக்கும் தொண்டாற்றியவர்கள் வரலாற்றை போற்றுவார்களா?' எனத் தெரிவித்துள்ளார்.

