ADDED : ஆக 27, 2024 03:52 AM

சென்னை: தமிழகத்தில் 17 சுங்கச்சாவடிகளில், செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்கிறது.
தமிழகத்தில் 64 இடங்களில் சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்க கட்டணத்தை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி, பல சுங்கச்சாவடிகளில் லோக்சபா தேர்தலுக்கு பின், ஜூன் 3ம் தேதி கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து, தற்போது 17 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னசமுத்திரம், எலியார்பதி, கொடை ரோடு, கிருஷ்ணகிரி, மேட்டுப்பட்டி, மொரட்டாண்டி, நாதக்கரை, ஸ்ரீபெரும்புதுார், ஓமலுார், பாளையம், புதுார் பாண்டியபுரம், சமயபுரம், ஸ்ரீவைகுண்டம், வீரசோழபுரம், வேலன்செட்டியூர், விஜயமங்கலம், விக்கிரவாண்டி ஆகியவை கட்டணம் உயர்த்தப்பட உள்ள சுங்கச்சாவடிகள். இங்கு, 5 சதவீதம் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருகிறது. இதனால், வாகனங்களின் டயர்களுக்கு தகுந்தபடி, 5 முதல் 150 ரூபாய் வரை கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக தகவல் பரவி வருகிறது. கட்டண உயர்வு குறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முறையான அறிவிப்பை வெளியிடாததே, இதற்கு காரணம்.
மேலும், சாலை அமைப்பிற்கான கட்டணத்தை வசூல் செய்த பின், சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். ஆனால், இந்த விதியை பின்பற்றாமல், கட்டணம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வருகிறது. இதனால், சரக்கு வாகனங்கள், ஆம்னி பஸ்களின் கட்டணம் மறைமுகமாக உயர்ந்து வருகிறது.
'மத்திய, மாநில அரசுகள்
மக்களை ஏமாற்ற கூட்டணி!'
தமிழகத்தில் விக்கிரவாண்டி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளின் கட்டணம், செப்டம்பர் 1 முதல் 7 சதவீதம் வரை, அதாவது 5 முதல் 150 ரூபாய் வரை உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணத்தில் 40 சதவீதத்தை சாலைகள் பராமரிப்புக்கு செலவிட வேண்டும். பெரும்பாலான சாலைகள் பராமரிக்கப்படுவதே இல்லை. சாலைகளை பராமரிக்காத நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு, சுங்க கட்டணத்தை உயர்த்த தார்மீக உரிமை இல்லை.
விதிகளின்படி தமிழகத்தில் 20 சுங்கச்சாவடிகள் தான் இருக்க வேண்டும்; ஆனால், 67 உள்ளன. 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசுடன் பேச்சு நடத்தி, 32 சாவடிகள் மூடப்படும் என, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார். இதுவரை ஒரு சுங்கச்சாவடி கூட மூடப்படவில்லை.
இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் கூட்டணி அமைத்து, மக்களை ஏமாற்றுகின்றன. சுங்க கட்டண உயர்வால் சரக்கு லாரிகளின் வாடகை உயர்ந்து விலைவாசி அதிகரிக்கும். தனியார் பஸ் கட்டணமும் உயரும்.
- அன்புமணி
பா.ம.க., தலைவர்