தோல்வி என்பது நிரந்தரம் அல்ல; தத்துவம் சொல்கிறார் கமல்!
தோல்வி என்பது நிரந்தரம் அல்ல; தத்துவம் சொல்கிறார் கமல்!
UPDATED : செப் 21, 2024 02:01 PM
ADDED : செப் 21, 2024 01:54 PM

சென்னை: 'தோல்வி என்பது நிரந்தரம் அல்ல' என மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுக்குழு கூட்டத்தில் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
சென்னையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2வது பொதுக்குழு கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதாவது: ம.நீ.ம., நிர்வாகிகள் சின்ன சின்ன பதவிகளுக்கு ஆசை கொள்ள வேண்டும். சாதித்து விட்டேன் என்று கூறவில்லை, முடியும் என்று கூறுகிறேன். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பேச்சு ஆபத்தானது என உலகிற்கே தெரியும். ஒரே தேர்தல் நடை பெற்றால் ஒருவருடைய நாமம் மட்டுமே உரைக்கப்படும். தற்போதைய ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, இனி வருபவர்களுக்கும் எச்சரிக்கை. ஒரே நாடு, ஒரே தேர்தல் செய்து பார்த்த வடுக்கள் ரஷ்யா போன்ற நாடுகளில் உள்ளன.
தோல்வி நிரந்தரம் அல்ல
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவுக்கு தேவையில்லாத ஒன்று. இந்தியாவிலேயே நேர்மையானது தமிழகம் தான். நேர்மையானவர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள்.
அதிக வரி கட்டுகிறோம் . இந்த நாட்டை வழி நடத்திக் கொண்டிருப்பது நமது வரி பணம் தான். அதை பகிர்ந்து தர வேண்டும்.மாநிலங்களுக்கான நிதி பகிர்வு நியாயமானதாக இருக்க வேண்டும். வீரமும், நேர்மையும் இருக்கிறதா என என்னையே கேட்டுக் கொண்டவன் நான் . தோல்வி என்பது நிரந்தரமானது அல்ல. அதேபோல், பிரதமர் பதவி என்பதும் நிரந்தரம் அல்ல.
ஜனநாயகம்
நான் நான்கு வயது முதல் மேடையை பார்த்து வருகிறேன். என் வாழ்வோடு இருக்கிறது. அதனால் அரசியலில் இருக்கிறேன். அன்றாட உடல் நலம் பேணுவது போல ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். இந்த பீடம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறிக்கொண்டே இருக்க வேண்டும். தோற்ற அரசியல்வாதியையும் மக்கள் ஞாபகம் வைத்திருப்பார்கள். ஒரு தமிழன் பிரதமராக முடியுமா? அதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும்.நான் அரசியலுக்கு வந்தது நமக்கோ, எனக்கோ அல்ல. நாளைக்காக விதை போடுவேன். வேறொருவர் சாப்பிடுவார். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.