திமுக.,வினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு: தேர்தல் ஆணையத்தில் புகார்
திமுக.,வினரின் செல்போன் ஒட்டுக்கேட்பு: தேர்தல் ஆணையத்தில் புகார்
ADDED : ஏப் 16, 2024 03:44 PM

புதுடில்லி: திமுக.,வினரின் செல்போன் உரையாடல் ஒட்டு கேட்கப்படுவதாக திமுக சார்பில் இந்திய தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்.,19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் நாளையுடன் முடியவுள்ள நிலையில், திமுக.,வினரின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப் படுவதாக இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த புகாரில், ''தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து திமுக.,வின் முக்கிய பொறுப்பாளர்கள், வேட்பாளர்கள், அவர்களின் நண்பர்களின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன.
மத்திய விசாரணை அமைப்புகள் மூலமாக உரையாடல்களை ஒட்டு கேட்டு வருவதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை, தனது செல்போனை உளவு பார்ப்பதாக தமிழக உளவுத்துறை மீது குற்றம்சாட்டியிருந்தார்.

