ADDED : நவ 07, 2024 01:55 AM

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கழுகுமலையில், குடைவரைக் கோவிலான கழுகாசலமூர்த்தி கோவில் உள்ளது. தென்பழனி என அழைக்கப்படும் இக்கோவிலில், கந்தசஷ்டி விழா கடந்த 2ம் தேதி துவங்கியது.
விழாவின் 5ம் நாளான நேற்று மாலை, சூரபத்மனின் தம்பி தாரகாசூரனை முருக பெருமான் வதம் செய்யும் சம்ஹார நிகழ்ச்சி நடந்தது. சம்ஹாரத்துக்காக, கழுகாசலமூர்த்தி சுவாமி கோவிலில் இருந்து எழுந்தருளினார். பக்தர்களின் கரகோஷங்களுக்கு இடையே, முருகபெருமான், தாரகாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சுவாமிக்கு தீபாராதனை நடத்தப்பட்டது.
கந்தசஷ்டி விழாவின் 6வது நாளில் தான் அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். ஆனால், தமிழகத்திலேயே இங்கு மட்டும்தான் 5வது நாளில், தாரகாசூரன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.