காவிரியில் துார்வாரும் பணி 60 நாட்களில் முடிக்க இலக்கு
காவிரியில் துார்வாரும் பணி 60 நாட்களில் முடிக்க இலக்கு
ADDED : ஏப் 01, 2025 02:59 AM

சென்னை : டெல்டா உள்ளிட்ட 12 மாவட்டங்களில், சிறப்பு துார்வாரும் பணிகளை 60 நாட்களில் முடிக்க, நீர்வளத்துறைக்கு கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
நீர்வளத்துறை திருச்சி மண்டலத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, அரியலுார், பெரம்பலுார், புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர் ஆகிய 12 மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன. இதிலுள்ள டெல்டா மாவட்டங்கள், காவிரி நீரை பாசன ஆதாரமாக கொண்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களில், 37 ஆறுகள் 1,970 கி.மீ., நீளத்திற்கும்; 21,629 கிளை கால்வாய்கள் 24,624 கி.மீ.,க்கும் பயணிக்கின்றன. இவற்றில், 2,358 ஏரிகள் உள்ளன.
மலைகள், காடுகள் ஆகியவற்றை கடந்து காவிரி நீர் வருவதால், மணல் அதிகமாக கலந்து வருகிறது. நீரை பகிர்ந்தளிக்கும் போது, ஆறுகள், கால்வாய்கள், வடிகால்களில் மண் திட்டுகள் உருவாகின்றன.
இதனால், நீரோட்டம் பாதிக்கப்படுவதால், மேட்டூர் மற்றும் கல்லணையில் திறக்கப்படும் காவிரி நீர், குறித்த நேரத்தில் கடைமடை பகுதிகளை சென்று சேருவது கிடையாது.
எனவே, ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி, மேட்டூர் அணை குறுவை பருவ நெல் சாகுபடிக்கு திறப்பதற்கு முன், டெல்டா மாவட்டங்களில் சிறப்பு துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
நடப்பாண்டு டெல்டா மட்டுமின்றி, திருச்சி மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், சிறப்பு துார்வாரும் பணிக்கு, 98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிதியில், 5,021 கி.மீ.,க்கு துார்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மொத்தம், 882 இடங்களில் துார்வாரப்பட உள்ளது. இப்பணிகளை, 60 நாட்களில் முடிக்க, நீர்வளத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதாவது வரும் மே மாதத்திற்குள் பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.