திட்டமிட்டபடி போராட்டம் 'டாஸ்மாக்' பணியாளர்கள் உறுதி
திட்டமிட்டபடி போராட்டம் 'டாஸ்மாக்' பணியாளர்கள் உறுதி
ADDED : செப் 26, 2025 11:19 PM
சென்னை:பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர், அக்., 2ல் போராட்டம் அறிவித்துள்ளனர். அந்த சங்க நிர்வாகிகளுடன், சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், டாஸ்மாக் உயர் அதிகாரிகள் நேற்று பேச்சு நடத்தினர்.
இது குறித்து, சங்க தலைவர் பெரியசாமி, பொதுச் செயலர் தனசேகரன், ஆகியோர் கூறியதாவது:
டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் ஊழியர் களை பணி நிரந்தரம் செய்வது, காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்குவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 2ல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பேச்சு நடத்த டாஸ்மாக் அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். இரண்டு மணி நேரம் பேச்சு நடத்தினர்.
'மூன்று கோரிக்கைகளும் அரசின் கொள்கை முடிவு. டாஸ்மாக் நிறுவனத்தால் மட்டும் எந்த முடிவும் எடுக்க முடியாது' என, அதிகாரிகள் தெரிவித்தனர். பேச்சில் முடிவு எட்டப் படவில்லை.
கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று, மீண்டும் பேச்சு நடத்துவதாக நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.