'ஸ்கேனர்' கருவிகள் வேண்டும் 'டாஸ்மாக்' ஊழியர்கள் கோரிக்கை
'ஸ்கேனர்' கருவிகள் வேண்டும் 'டாஸ்மாக்' ஊழியர்கள் கோரிக்கை
ADDED : டிச 14, 2024 09:21 PM
சென்னை:தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக மதுபானங்களை விற்கிறது. அவற்றில் பணிபுரியும் ஊழியர்கள், அரசு நிர்ணயம் செய்திருப்பதை விட கூடுதல் விலைக்கு மது விற்பது உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர்.
எனவே, கிடங்கில் இருந்து கடைக்கு அனுப்புவது, 'குடி'மகன்களிடம் மது பாட்டிலை விற்பது வரை முழு கணினிமய திட்டத்தை, 'டாஸ்மாக்' துவக்கியுள்ளது.
முதல் கட்டமாக, இத்திட்டம் ராமநாதபுரம், அரக்கோணம், காஞ்சிபுரம் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு, சிவகங்கை, கரூர் மாவட்டங் களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது.
அம்மாவட்ட மதுக்கடைகளில், மொபைல் போன் போன்று கையடக்க வடிவில், 'பார் கோடு ஸ்கேன்' கருவி மற்றும் பிரின்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.
கருவியில் பாட்டிலை ஸ்கேன் செய்த பின் தான் விற்க வேண்டும். அதில், மது வகை பெயர், விலை, நேரம் உள்ளிட்ட விபரங்கள் பதிவாகின்றன.
பிரின்டரில் வரும் ரசீதை, வாடிக்கையாளரிடம் வழங்க வேண்டும். இதன் விற்பனை விபரத்தை, அதிகாரிகள் எங்கிருந்தபடியும் கணினியில் அறியலாம்.
இதுகுறித்து, கடை ஊழியர்கள் கூறியதாவது:
பல ஊழியர்கள், 50 வயதை கடந்தவர்கள். பார்வை திறன் பிரச்னைக்கு கண்ணாடி அணிந்துள்ளனர்.
எனவே, மொபைல் போன் போன்ற கருவியில், 'ஸ்கேன்' செய்வது, விபரங்களை பதிவிடுவது மிகவும் சிரமமாக உள்ளது.
பல்பொருள் அங்காடிகளில் இருப்பது போல, பெரிய ஸ்கேனர் கருவி வழங்க வேண்டும். சுலபமாகவும், விரைவாகவும் ஸ்கேன் செய்ய முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.