தேர்தலை முன்னிட்டு மதுபானம் விற்க கட்டுப்பாடுகள் விதித்தது 'டாஸ்மாக்'
தேர்தலை முன்னிட்டு மதுபானம் விற்க கட்டுப்பாடுகள் விதித்தது 'டாஸ்மாக்'
ADDED : மார் 18, 2024 02:44 AM

சென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு, 'மதுக்கடைகளில், 50 சதவீதத்திற்கு மேல் இருப்பு இருக்கக்கூடாது' என்பது உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, 'டாஸ்மாக்' நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
எனவே, மதுக்கடைகளிலும், மது விற்பனையிலும் முறைகேட்டை தடுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து டாஸ்மாக் உத்தரவிட்டு உள்ளது.
கடிதம்
இதுதொடர்பாக, மதுக்கடை ஊழியர்களுக்கு, மாவட்ட மேலாளர்கள் அனுப்பியுள்ள கடிதம் விபரம்:
மதுக்கடைகளில், 50 சதவீதத்திற்கு மேல் மது வகைகள் இருப்பு இருக்க கூடாது. மதுக்கடையின் சராசரி விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, 30 சதவீதத்திற்கு அதிகம் இருக்கக்கூடாது.
மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது. தினமும் கண்காணிப்பு கேமரா காட்சி பதிவு ஆய்வு செய்யப்படும்.
மதுக்கடைகளில் உள்ள, 21 பதிவேடுகளும் தினசரி முறையாக பராமரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இருப்பு பதிவேடு கட்டாயம் பராமரிக்கப்பட வேண்டும்.
மதுக்கடைகளும், அதில் உள்ள மதுக்கூடங்களும் அரசு அனுமதித்த நேரமான மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை மட்டும் இயங்க வேண்டும்.
மதுக்கூடங்களில் மதுபானம் இருப்பது கண்டறியப்பட்டால், மதுக்கடை ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
விற்கப்படும் மதுபானங்களுக்கு கட்டாயம் ரசீது தர வேண்டும்.
அடையாள அட்டை
பி.ஓ.எஸ்., எனப்படும், விற்பனை முனைய கருவியில் விற்பதை அதிகப்படுத்த வேண்டும். மதுக்கடைகளில், 'டோக்கன்' மற்றும், 'கூப்பன்'களுக்கு கண்டிப்பாக விற்கக்கூடாது.
அனுமதியற்ற மதுக்கூடம் செயல்பட்டால், கடை மேற்பார்வையாளர் உடனே, மது விலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார், மாவட்ட மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும்.
கடை ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிந்து பணிபுரிய வேண்டும்.
காலாவதியான மதுபானங்கள் கடைகளில் இருப்பு இருத்தல் கூடாது.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

