ADDED : நவ 13, 2025 02:00 AM
சென்னை: 'பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு; அரசு நினைத்தால் மட்டுமே வழங்க முடியும்' என, மதுக்கடை ஊழியர்களிடம், 'டாஸ்மாக்' நிர்வாகம் திட்ட வட்டமாக தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், 4,787 சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது.
இவற்றில், 25,000க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். அவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் கட்சி சாராத தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் ஆகிய கோரிக்கைகளை, ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், அதன் உயரதிகாரிகளை, கோரிக்கைகள் தொடர்பாக, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.
அவர்களிடம், 'பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது என்பது, தமிழக அரசின் கொள்கை முடிவு; அரசு நினைத்தால் மட்டுமே வழங்க முடியும்; நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது' என, டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, டிச., 16 முதல், சென்னை தலைமை செயலகம் முன் காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக, டாஸ்மாக் பணியாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

