ADDED : ஆக 25, 2026 12:30 AM
சென்னை: தமிழக அரசின் டாஸ்மாக் மது கடைகளில், 25,000க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், 28ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு அறிவித்தது.
இதையடுத்து, தொழிற்சங்கங்களின் நிர்வாகிகளுடன், சென்னை எழும்பூரில் உள்ள, டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில், நேற்று பேச்சுவார்த்தை நடந்தது.
இதில், மது விலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது குறித்து, டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஏ.ஐ.டி.யூ.சி., தலைவர் பெரியசாமி கூறியதாவது:
அமைச்சர் விக்னேஷ், 'வரும், 31ம் தேதி மது விலக்கு ஆயத்தீர்வை துறை மானிய கோரிக்கை வருகிறது. அதில், பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும். எனவே, மானிய கோரிக்கை விவாதம் வரை வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்' என, அறிவுறுத்தினார்.
பல முறை இதே போல் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றப்பட்ட நிலையில், இம்முறையும் ஏமாற்றமாக முடிந்து விடக் கூடாது என்பதை அரசுக்கு தெரிவிக்கும் வகையில், ஏற்கனவே அறிவித்தபடி, வரும், 28ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டிய நிலைக்கு, பணியாளர்கள் தள்ளப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
