டீக்கடை பெஞ்ச்: கூட்டுறவு துறை பணி தேர்வில் 'கோல்மால்?'
டீக்கடை பெஞ்ச்: கூட்டுறவு துறை பணி தேர்வில் 'கோல்மால்?'
ADDED : ஜன 25, 2024 12:20 AM

''திண்டுக்கல்ல மாநாடு நடத்த போறாருங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாருவே அது...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''மண்பாண்ட தொழிலாளர்களான குலாலர் சமுதாய தலைவர் சேம நாராயணன், கருணாநிதி காலத்துல இருந்தே ஆயிரம் விளக்கு தொகுதியில, தி.மு.க. கூட்டணியில, 'சீட்' கேட்பாரு... அப்ப கருணாநிதி, 'அடுத்த தேர்தல்ல தர்றோம்'னு சொன்னதை நம்பி ஆதரவு கொடுப்பாருங்க...
''ஆனா, ஒரு முறை கூட, அவருக்கு சீட் தந்ததே இல்லைங்க... இப்ப, தமிழக அரசின் வாரிய தலைவர் பதவியை எதிர்பார்த்தவருக்கு அதுவும் கிடைக்கலைங்க...
''இதனால, வர்ற லோக்சபா தேர்தல்ல எந்த கூட்டணியை ஆதரிக்கிறதுன்னு, வர்ற பிப்ரவரி 4ல், தன் சமுதாய மாநாட்டை திண்டுக்கல்ல கூட்டி அதிரடி முடிவெடுக்க போறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''முதல் நாள் கறி சோறு போட்டு, மறுநாள் பட்டினி போட்டுட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த விழாவுல ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சேலத்துல, சமீபத்துல தி.மு.க. இளைஞர் அணி மாநாடு நடந்துச்சே... சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் தலைமையில், நாலு ஐ.ஜி.க்கள், எட்டு டி.ஐ.ஜி.க்கள், 20 எஸ்.பி.க்கள் மேற்பார்வையில், 20 மாவட்டங்களை சேர்ந்த, 8,600 போலீசார் பாதுகாப்பு பணியில ஈடுபட்டாங்க பா...
''இதுல, உயர் அதிகாரிகளுக்கு, முதல் நாள் 20ம் தேதி, பிரியாணி உட்பட சூப்பரா அசைவ விருந்து குடுத்திருக்காங்க... இன்ஸ்பெக்டர் துவங்கி போலீசார் வரைக்கும் மட்டன், சிக்கன் குழம்புடன் சாப்பாடு குடுத்தாங்க பா...
''ஆனா, மாநாடு நடந்த 21ம் தேதி, பாதுகாப்பு போலீசாரை கண்டுக்காம விட்டுட்டாங்க... குறிப்பா, நெடுஞ்சாலையில கடைகளே இல்லாத இடங்கள்ல நிறுத்தப்பட்ட போலீசார், ரொம்பவே தவிச்சு போயிட்டாங்க பா...
''பி.பி. சுகர் பாதிப்பு இருந்த பல போலீசார், சாயந்தரத்துக்கு மேல நிற்க முடியாம, கிளம்பி போயிட்டாங்க... இதனால, மாநாடு முடிஞ்சதும், தலைவாசல் சுங்கச்சாவடி துவங்கி, ஓமலுார் சுங்கச்சாவடி வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, தி.மு.க.வினர் மட்டுமில்லாம, பொதுமக்களும் கடுமையா அவதிப்பட்டாங்க...
''இது, ஏ.டி.ஜி.பி. அருண் காதுக்கு போனதால, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு, இரண்டு நாள் லீவ் குடுத்து சமாதானப்படுத்தி இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''பணி நியமனத்துல முறைகேடுன்னு புலம்பறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்ட கூட்டுறவு துறையில, காலியாக இருக்கற, 10 உதவியாளர் பணியிடங்களை நிரப்பறதுக்காக, 'ஆன்லைன்ல' விண்ணப்பம் வாங்கினா... டிச. 24ல் நடந்த எழுத்து தேர்வை, 325 பேர் எழுதினா ஓய்...
''இதுல எத்தனை பேர், எவ்வளவு மார்க் எடுத்தான்னு எந்த விபரமும் வெளியிடல... டைரக்டா, 1:3 என்ற விகிதத்துல, 30 பேரை கூப்பிட்டு, கடந்த 19ம் தேதி இன்டர்வியூ நடத்தி முடிச்சுட்டா ஓய்...
''இதுல இருந்து, 10 பேரை உதவியாளரா நியமிக்க போறா... இந்த, 10 பேருமே, பெரும்பாலும் ஆளுங்கட்சி புள்ளிகளின் வாரிசுகள் அல்லது உறவினர்களா தான் இருப்பாளாம்...
''பணி நியமன பட்டியல் வந்ததும், 'தேர்வுல முறைகேடு நடந்திருக்கு'ன்னு சொல்லி, கோர்ட்டுக்கு போக, தேர்வு எழுதிய பலரும் முடிவு பண்ணியிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.