ADDED : ஜன 29, 2024 12:51 AM

வேர்க்க விறுவிறுக்க வந்த குப்பண்ணா, தண்ணீர் குடுவையை எடுத்து மடமடவென குடித்துவிட்டு, ''தரம் இல்லாத குடிநீர் சப்ளை செய்யறா ஓய்...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார்.
''எங்க பா...'' எனக்கேட்டார் அன்வர்பாய்.
''திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி இருக்கோல்லியோ... இங்க இருக்கற ஒரு தனியார் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்துல, அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலா ரெண்டு ஆழ்துளை மோட்டார்களை போட்டு, நாள் முழுக்க தண்ணீர் உறிஞ்சிண்டு இருக்கா...
''பெரும்பாலும் சென்னை நகருக்கு இங்கிருந்து தான் நிறைய தண்ணீர் கேன் போறது... ஆர்டர் குவிஞ்சுண்டு இருக்கறதால, தண்ணீரை சரியா சுத்திகரிக்காமயே வினியோகிக்கறா ஓய்...
''பொன்னேரியை சேர்ந்த ஒருத்தர் இங்க வாங்கின தண்ணீர் கேன்ல பூச்சி மிதந்துண்டு இருந்தாம்... அதிகாரிகள் யாரும் இந்த பக்கம் எட்டிக் கூட பார்க்கறதில்லயாம்...'' என்றார் குப்பண்ணா.
''மூணு வேட்பாளர் பேரு பட்டியல்ல இருக்குதாம் வே...'' என, அடுத்த தகவலை ஆரம்பித்தார் அண்ணாச்சி.
''எந்த லோக்சபா தொகுதிங்க...'' எனக்கேட்டார் அந்தோணிசாமி.
''புதுச்சேரி லோக்சபா தொகுதியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு ஒதுக்கப் போறாவளாம்...
''ஒருவேளை அவங்க வேண்டாமுன்னு சொல்லிட்டா, உள்ளூரை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் அல்லது புதுச்சேரி அரசின் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் உள்ளிட்ட பதவிகளை வகிச்ச, முன்னாள் ஐ.எப்.எஸ்., அதிகாரி சத்திய மூர்த்திக்கு ஒதுக்க தலைமை முடிவு செஞ்சிட்டாம் வே...'' என்றார் அண்ணாச்சி.
''லோக்சபா தேர்தல் சம்பந்தமா நானும் ஒரு மேட்டர் சொல்லுறேன் கேளுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்.
''சேலம், ஓமலுார் சட்டசபை தொகுதியின் திண்டமங்கலத்தில், பொங்கல் விழா சமீபத்துல நடந்துச்சுங்க... அ.தி.மு.க., பொது செயலர் பழனிசாமி, மாட்டு வண்டியில வலம் வந்து தடபுடலா பொங்கல் கொண்டாடினாருங்க...
''விழா ஏற்பாட்டை செஞ்சதெல்லாம், அங்குள்ள பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் தானாம்... இதுக்காக 20 லட்சம் ரூபாய் பணத்தை தண்ணியா செலவு செஞ்சிருக்காருங்க...
''இதை பார்த்த பழனிசாமி, அந்த ஒப்பந்ததாரருக்கு சேலம் லோக்சபா தொகுதியில போட்டி யிட சீட் கன்பார்ம் செஞ்சிட்டாருங்க... அவரோ அல்லது அவரோட மகனோ போட்டி போட வாய்ப்பிருக்கு...
''ஓமலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மணிக்கு இந்த ஒப்பந்ததாரர் நெருங்கின சொந்தமாம்... சேலத்தில் அதிகமுள்ள வன்னியர் சமூகத்தை சேர்ந்த இவருக்கு, அம்மா பேரவை துணைசெயலர் பதவியை வேற சமீபத்துல கொடுத்திருக்காங்க...
''சொந்த காசை செலவு செய்ய அவர் தயாரா இருக்குறதால, கண்ணை மூடிகிட்டு சீட் கொடுத்துட்டதா கட்சிக்காரங்கள் சொல்றாங்க...'' என்றார் அந்தோணிசாமி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்ததது.