ADDED : ஆக 30, 2025 07:09 AM

விழுப்புரம் : அரசு பள்ளியில் மாணவியர்களிடம் 'பேட் டச்சில்' ஈடுபட்ட இடைநிலை ஆசிரியருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
விழுப்புரம் அடுத்த முகையூரை சேர்ந்தவர் பால் வின்சென்ட், 48; விழுப்புரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மாணவியர் படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆங்கிலம் பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார்.
இவர், தங்களிடம் 'பேட் டச்சில்' ஈடுபட்டதாக, 6 ம் வகுப்பு மாணவியர் 2 பேரும், ஒரு மாணவியிடம் ஆபாசமாக பேசியதாகவும் நேற்று முன்தினம் பள்ளி தலைமை ஆசிரியையிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தனர்.
இது குறித்து, தலைமை ஆசிரியை, மாவட்ட குழந்தைகள் நல அமைப்பிற்கு தகவல் தெரிவித்தார்.
அவர்கள், பள்ளிக்கு நேரடியாக வந்து மாணவியர்களிடம் விசாரணை நடத்தி விழுப்புரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து, நேற்று காலை 8:45 மணியளவில், குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் போலீசார் பள்ளிக்கு வந்து ஆசிரியர் பால் வின்சென்டை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
அப்போது, அங்கு திரண்ட பாதி க்கப்பட்ட மாணவியர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், ஆசிரியர் பால் வின்சென்ட்டிற்கு தர்ம அடி கொடுத்தனர். இதில், அவருக்கு இடதுபுற கீழ் உதட்டில் காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்டியது.
போலீசார் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, பெற்றோர் கலைந்து சென்றனர். தொடர்ந்து, விழுப்புரம் மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப் பதிந்து பால் வின்சென்டை கைது செய்து விசாரிக்கின்றனர்.

