பள்ளிகளில் தொழிற்கல்விக்கு மூடுவிழா; தமிழக அரசு மீது ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
பள்ளிகளில் தொழிற்கல்விக்கு மூடுவிழா; தமிழக அரசு மீது ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
ADDED : ஏப் 05, 2025 04:58 AM

திருப்பூர் : ''அரசுப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டத்துக்கு மூடுவிழா நடத்துவது போல், அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அந்தந்தப் பகுதிகளில் வேலைவாய்ப்புக்கேற்ற தொழிற்கல்வியைக் கற்றுத்தரவும் ஆர்வம் காட்டப்படுவதில்லை'' என்று ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளில், தொழில்கல்வியை மாணவ, மாணவியர் மத்தியில் ஊக்குவிக்க இயந்திரவியல், தையல், அழகு கலை, வேளாண்மை பொறியியல், மின்சாதனம் பழுது பார்ப்பு உள்ளிட்ட தொழில் சார்ந்த படிப்புகள் உள்ளன; இவற்றை மாணவர்கள் பலரும் பயின்று வருகின்றனர். 'தொழிற்கல்வி பாடப்பிரிவுக்கு மூடுவிழா காணும் வகையில் அரசின் நடவடிக்கை இருக்கிறது' என்ற ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
தேசிய ஆசிரியர் சங்க உறுப்பினர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
மத்திய, மாநில அரசுகள் தொழில் வாய்ப்புகளை உருவாக்க ஆர்வம் காட்டி வருகின்றன. தமிழக அரசு 'நான் முதல்வன்' திட்டத்தில், பல்வேறு தொழில் வாய்ப்புகளில் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலான ஊக்குவிப்பை வழங்கி வருகிறது. ஆனால், கடந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, பள்ளிகளில் இருந்த தொழில்கல்வி பாடப்பிரிவுக்கு மூடு விழா நடத்தும் வகையில், காலியாகும் தொழில்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
ஒவ்வொரு மண்டலத்திலும், குறிப்பிட்ட சில துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. உதாரணமாக, திருப்பூரில் ஆடை உற்பத்தி துறை சார்ந்த, நிட்டிங், டையிங், பிரின்டிங் என பல துறைகளில் வேலைவாய்ப்புள்ளது. கோவையில் வேளாண் பொறியியல் துறை சார்ந்த வேலை வாய்ப்பு, நீலகிரி மாவட்டத்தில் பழங்களை பதனிடும் தொழில் மற்றும் காய்கறி சாகுபடி தொழில்; கடலோர மாவட்டங்களில் மீன்களை பதப்படுத்துவது, மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துவது என, ஒவ்வொரு மாவட்ட, மண்டலங்களிலும் குறிப்பிட்ட சில தொழில்கள் பிரபலமாக உள்ளன.
அந்தந்த தொழில்களை கற்றுத்தேற அந்தந்த மாவட்ட மற்றும் மண்டலங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி வாயிலாக பயிற்சி வழங்கினால், ஏராளமான தொழில் முனைவோரை உருவாக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.

