ஆசிரியர் தற்செயல் விடுப்பு போராட்டம்; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
ஆசிரியர் தற்செயல் விடுப்பு போராட்டம்; 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
UPDATED : பிப் 25, 2025 06:34 PM
ADDED : பிப் 25, 2025 06:11 PM

சென்னை: இன்று நடத்திய தற்செயல் விடுப்பு போராட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டதால், ஏராளமான தொடக்கப்பள்ளிகள் செயல்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, இன்று 25ம் தேதி முதல் போராட்டம் நடத்தப் போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. எனினும், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி தமிழகத்தில் இன்று அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகள் பல, தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடக்க கல்வித்துறையில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 239 ஆசிரியர்களில், 53 ஆயிரத்து 166 பேர் தற்செயல் விடுப்பில் இருந்தனர். அரசு கணக்கின்படி 2779 பள்ளிகள் செயல்படவில்லை.
அரசு ஊழியர் சங்கங்கள் பலமுடன் இருக்கும் துறைகளிலும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்துக் கொண்டனர். அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டமும் நடந்தது. தேர்தலை முன்னிட்டு, ஆசிரியர், அரசு ஊழியர் தொடங்கியுள்ள போராட்டத்தால் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.