ஆசிரியர்கள் கல்வி சான்று சரிபார்ப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ஆசிரியர்கள் கல்வி சான்று சரிபார்ப்பு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
ADDED : ஆக 15, 2026 06:30 AM

சென்னை: 'ஆசிரியர்கள் பணியில் சேரும் போது, தகுதிக்காண் பருவத்திலேயே, அவர்களின் கல்வி சான்றின் உண்மைத் தன்மையை சரி பார்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பணியில் சேரும் ஆசிரியர்களின் கல்வி சான்று, உரிய துறைகளுக்கு அனுப்பப்பட்டு, உண்மைத் தன்மை சரி பார்க்கப்படுவது வழக்கம்.
சில நேரங்களில், ஆசிரியர்களின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்படாமல், அவர்கள் ஓய்வு பெறும் நாளில், திடீரென கல்விச் சான்று உண்மைத் தன்மை அற்றது என கூறி, அவர்கள் ஓய்வு பெற அனுமதி மறுக்கப்படுகிறது.
அவர்களின் ஓய்வூதிய பலன்களும், நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், நீதிமன்றத்தை நாடுகின்றனர்.
இது போன்ற இன்னல்களை தவிர்க்க, ஆசிரியர்களின் கல்விச்சான்று உண்மைத் தன்மையை அறிய, வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த உடன், தகுதிகாண் பருவத்திற்குள்ளாகவே, கல்விச்சான்று உண்மைத் தன்மை பணிகளை முடிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே பணியில் உள்ள ஆசிரியர்கள், தாங்கள் ஓய்வு பெறும் நாளுக்கு, ஓராண்டுக்கு முன்பாக, உண்மைத் தன்மை அறியப்பட்ட விபரத்தை, பணிப்பதிவேட்டில் பதிவிட வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளது.
