பணி நிரந்தரம் கோரிய போராட்டம் தொடரும்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரிய போராட்டம் தொடரும்: பகுதி நேர ஆசிரியர்கள் அறிவிப்பு
ADDED : ஜன 19, 2026 10:03 PM

சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, 12ம் நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட, பகுதி நேர ஆசிரியர்களை, போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கடந்த 8ம் தேதி முதல், பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, பள்ளிக்கல்வித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.
12ம் நாளாக, 600க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள், டி.பி.ஐ., அலுவலகம் அருகே அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டோரை, போலீசார் கைது செய்ய முயன்ற போது, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் குண்டு கட்டாக துாக்கிச் சென்று, 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஏற்றிச் சென்று, திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். மாலை அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்க மாநிலக் குழுவினர், தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷிடம் பேச்சு நடத்தினர். ஆனால், முடிவு எட்டப்படவில்லை.
நல்ல அறிவிப்பு வெளியாகும் வரை, போராட்டம் தொடரும் என, பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் கூட்டு இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

