மா விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர்: அமைச்சர் முருகன்
மா விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர்: அமைச்சர் முருகன்
ADDED : அக் 16, 2025 02:11 AM

சென்னை: மத்திய இணை அமைச்சர் முருகன் வெளியிட்ட அறிக்கை:
மாம்பழ விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க கோரி, சில மாதங்களுக்கு முன், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாகவும், தற்போது மீண்டும் கடிதம் எழுதுவதாகவும் கூறியிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். தமிழக மா விவசாயிகள் விஷயத்தில், தி.மு.க., அரசு செய்வது, வெற்று நாடகம் மட்டுமே.
அரசின் செயலற்ற தன்மையால், தமிழகத்தில் மா விவசாயிகள், பெரும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்.
கர்நாடகா, ஆந்திரா உட்பட பல மாநிலங்களில், மாம்பழக்கூழ் தயாரிக்கும் ஆலைகள் அதிக அளவில் உள்ளன. இவற்றுக்கு, மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது.
மற்ற மாநில அரசுகள், மத்திய அரசுடன் இணைந்து, மாம்பழம் சார்ந்த தொழில்களை விரிவுப்படுத்தி வருகின்றன. தமிழக மா விவசாயிகளும், மற்ற மாநில மாம்பழக்கூழ் ஆலைகளை நம்பி இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.
தமிழகத்தின் மாம்பழம் சார்ந்த தொழில்களை துவக்க திட்டமிட வேண்டியது யார்; குளிர்ப்பதன கிடங்கு அமைக்க வேண்டியது யார்; குளிர்பான நிறுவனங்களை அழைத்து பேச வேண்டியது யார்; ஆட்சி காலம் முழுதும் எதுவும் செய்யாமல், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதாக கூறி முதல்வர் நீலிக்கண்ணீர் வடிப்பது நாடகமே.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.