ADDED : செப் 05, 2026 03:05 AM

சென்னை: சென்னை வி.ஐ.டி.,யில், 'டெக்னோ வி.ஐ.டி., சர்வதேச தொழில்நுட்ப திரு விழாவில், உலகின் 14 நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
சென்னை வி.ஐ.டி.,யில், டெக்னோ வி.ஐ.டி., எனும் சர்வதேச தொழில்நுட்ப திருவிழா நேற்று முன் தினம் தொடங்கி, நேற்று நிறைவடைந்தது. ரஷ்யா உட்பட, 14 நாடுகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
அதில், ரஷ்ய துணை துாதரக அதிகாரி அலெக்சாண்டர் போமின் பேசியதாவது:
இந்தியா - ரஷ்யா இடையில், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இரு நாடுகளும் விண்வெளி, அணுசக்தி, செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் 'டிஜிட்டல்' துறைகளில் இணைந்து செயல்படுகின்றன.
ஒத்துழைப்பு திருநெல்வேலி கூடங்குளம் அணு மின் நிலையம், இந்தியா - ரஷ்யா தொழில்நுட்ப ஒத்துழைப்பின் முக்கிய எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. இளைஞர்கள் மற்றும் பல்கலைகள், இரு நாடுகளின் எதிர்கால ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
டெய்ம்லர் இந்தியா வணிக வாகனங்கள் நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் துணைத் தலைவர் அருள்செல்வம் ஹரிகிருஷ்ணன், ''எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும் ஒரு நோக்கத்தை கொண்டிருக்காவிட்டால், அது நிலைத்திருக்காது. இளைஞர்கள், மனித நலன் சார்ந்து, புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன்வர வேண்டும்,'' என்றார்.
அறிவியல் வி.ஐ.டி., பல்கலை நிறுவனர் கோ.விஸ்வநாதன், ''வளர்ச்சியடையவும், பொருளாதார ரீதியாக முன்னேறவும் விரும்பும் எந்தவொரு சமூகத்திற்கும், அறிவியலும் தொழில்நுட்பமும் பயனுள்ளதாக உள்ளன. வெளிநாடுகளுடன் போட்டியிடுவதற்கு, உற் பத்தி துறை உட்பட பல துறைகளில் இந்தியா, தன் உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும்,'' என்றார் .
பல்கலை துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் பேசுகையில், ''மாணவர்கள் தங்கள் தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பை, டெக்னோ வி.ஐ.டி., விழா வழங்கும்,'' என்றார்.
சென்னை வி.ஐ.டி., இணை வேந்தர் தியாகராஜன், இயக்குநர் சத்தியநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
