ADDED : ஜன 01, 2024 06:12 AM
பெரம்பலுார் : -அரியலுாரை சேர்ந்த சதீஷ்குமார், 36, சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் கலெக் ஷன் ஏஜன்டாக பணியாற்றி வருகிறார். அரியலுார் மாவட்டம், மண்டையன்குறிச்சி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார், 41, என்பவரால் கோவை மாவட்டம், கிச்சக்கத்தியூர் சிறுமுகை கிராமத்தில் வசிக்கும் ராஜ்குமார் அவருக்கு அறிமுகமானார்.
சதீஷ்குமாருக்கு இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கி தருவதாக, ராஜ்குமார் ஆசை வார்த்தை கூறினார். நம்பிய சதீஷ்குமார், ராஜ்குமார் வங்கி கணக்கிற்கு, 14.20 லட்சம் ரூபாய் அனுப்பி உள்ளார்.
அதன்பின், சதீஷ்குமாருக்கு போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றியதுடன், அவர் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் இருந்தார்.
இது குறித்து, அரியலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில், சதீஷ்குமார் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அரியலுார் மாவட்டத்தை சேர்ந்த பலரிடம், இந்திய உணவு கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, 1.55 கோடி ரூபாய் வரை, ராஜ்குமார் ஏமாற்றியது தெரிய வந்தது.
அரியலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நேற்று முன்தினம் இரவு ராஜ்குமாரை கைது செய்தனர்.