392 கிலோ கஞ்சா கடத்தலில் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
392 கிலோ கஞ்சா கடத்தலில் வாலிபருக்கு 12 ஆண்டு சிறை
ADDED : ஜன 29, 2024 05:50 AM
சென்னை: ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில், 392 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், தேனி மாவட்டத்தை சேர்ந்தவருக்கு, 12 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து, சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வருவதாக, 2018 செப்.,23ல், தேசிய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டம் காரனோடை சுங்கச்சாவடி அருகே, போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அவ்வழியே வந்த சரக்கு வாகனம் ஒன்றை பரிசோதித்தனர். அப்போது, வாகனத்தின் பின் பகுதியில், 185 பண்டல்களில் மறைத்து வைத்திருந்த, 392.9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த செல்லத்துரையை, 45 கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.ஜூலியட் புஷ்பா முன் விசாரணைக்கு வந்தது. தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சார்பில், சிறப்பு அரசு வழக்கறிஞர் செல்லத்துரை ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, செல்லத்துரை மீதான குற்றச்சாட்டுகள், சந்தேகத்துக்கு இடமின்றி அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், அவருக்கு, 12 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 1.20 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.