திராவிட இயக்க கருத்துகளை மக்களுக்கு சொல்லுங்கள்: கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
திராவிட இயக்க கருத்துகளை மக்களுக்கு சொல்லுங்கள்: கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்
ADDED : நவ 24, 2024 02:10 AM

சென்னை: “திராவிட இயக்க கருத்துகளை மக்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
கருணாநிதி நுாற்றாண்டையொட்டி, தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி ஏற்பாட்டில், 'கருணாநிதி 100' என்ற தலைப்பில் வினாடி - வினா போட்டி நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 2 லட்சம் பேர் இதில் பங்கேற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
சுயமரியாதை உணர்வு
திராவிட இயக்கக் கருத்துகளை, இளைஞர்களின் நெஞ்சில் பதியம் போடும் வகையில், கருணாநிதி 100 வினாடி- - வினா போட்டி நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் சமுதாயத்தை அடிமைப்படுத்தியோரையும், தமிழினத்தின் வளர்ச்சியை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, உள்நோக்கத்துடன் இருந்தவர்களையும் நோக்கி, பகுத்தறிவுப் பார்வையில் சுயமரியாதை உணர்வுடன் கேள்வி எழுப்பியவர் கருணாநிதி.
கேள்வி எழுப்பியதோடு நின்று விடாமல், அரசியல் களத்தில் மறுமலர்ச்சிக்கான சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கி, தமிழ் சமுதாயத்திற்கான விடியலாக இருந்தவர்.
பாசத்தைப் பொழியும்போது கனிமொழியாகவும், தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட லோக்சபாவில் பேசும்போது, கர்ஜனை மொழியாகவும், இந்த வினாடி - வினா நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்திய கனிமொழி இருக்கிறார். திராவிட இயக்கத்தின் கொள்கையை, சமூக நீதி வரலாற்றை, சுயமரியாதை சமதர்ம உணர்வுகளோடு வெளிப்படுத்தி, பார்லிமென்டில் வீரமங்கையாக கனிமொழி செயல்பட்டு வருகிறார்.
தகவல் களஞ்சியம்
இந்நிகழ்ச்சியில், 250 புத்தகங்களை ஆய்வு செய்து, 40,000 கேள்விகளை, வினாடி - வினா குழுவினர் உருவாக்கிஉள்ளனர்.
கேள்விகள் கேட்டதை விட, போட்டியில் பங்கேற்ற 2 லட்சம் பேரை திராவிட இயக்கம் பற்றி படிக்க வைத்துள்ளனர். போட்டியில் பங்கேற்ற அனைவரும் திராவிட தகவல் களஞ்சியமாக மாறியுள்ளனர். இதுதான் உண்மையான வெற்றி.
போட்டியில் வென்றவர்கள், தங்களைப் போலவே பலரையும் உருவாக்க வேண்டும்.
இது 'வாட்ஸாப்' யுகம். வாட்ஸாப்பில் யார் யாரோ பகிரும் செய்திகளை ஆராய்ந்து பார்க்காமல், உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் இருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், உண்மை வரலாறுகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
இதுபோன்ற கருத்துகளை விதைக்கும் களப்பணியை, கனிமொழி தொடர வேண்டும். பேசிப்பேசி, எழுதி எழுதி வளர்ந்த இயக்கம், திராவிட இயக்கம். எனவே, பேச்சாளர்களை, எழுத்தாளர்களை இளம் தலைமுறையில் இருந்து உருவாக்க வேண்டும்.
மிக நீண்ட வரலாற்றுத் தகவல்களைகூட மிகச் சுவையாக, மக்கள் மனதில் பதியும் வகையில் நறுக்கென்று சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.