ADDED : டிச 01, 2024 10:24 AM

சென்னை: சென்னையில் நேற்று பெய்த கனமழையால் கோவில் குளங்கள் நிரம்பி இருப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெஞ்சல் புயல் காரணமாக, நேற்று (நவ.,30) கொட்டி தீர்த்த கனமழையால், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் குளம், சித்திரக்குளம், அகஸ்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேச கோவில் குளம், திருப்போரூரில் உள்ள கோவில் குளங்கள் நிரம்பி வழிந்தன. 24.2 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட வடபழனி ஆண்டவர் கோவில் குளமும் நிரம்பி வழிந்தது.
கோவில் குளங்கள் நீர் நிரம்பி காட்சியளிப்பது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிண்டி ரேஸ் கோர்ஸில் 1.5 லட்சம் கன மீட்டர் கொள்ளளவு கொண்ட ஆறு குளங்களும் நேற்றைய கனமழையால் நிரம்பியுள்ளன. அம்பத்தூரில் அய்யன் குளம், கலைவாணன் குளம், வைரக்குளம் நிரம்பி வழிந்தது. மணலியில், கோசாபூரில் உள்ள 26,625 சதுர மீட்டர் பரப்பு கொண்ட குளம் 80% நிரம்பியது.
நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேத்துப்பட்டு, வேளச்சேரி, வில்லிவாக்கம் போன்ற சில ஏரிகளைத் தவிர, நகரத்தில் பெரிய ஏரிகள் எதுவும் இல்லை. தற்போது அம்பத்தூர், கொரட்டூர் மற்றும் மாதவரத்தில் உள்ள 30 குளங்களை தூர்வார வேண்டும். நகருக்குள் திறந்த வெளிகள் இருந்தால், குளங்களை உருவாக்கலாம். அதிக குளங்கள் இருந்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்கின்றனர்.