'கோயில்கள் ஒன்றும் அண்ணா அறிவாலயம் அல்ல': அமைச்சருக்கு கண்டனம்
'கோயில்கள் ஒன்றும் அண்ணா அறிவாலயம் அல்ல': அமைச்சருக்கு கண்டனம்
UPDATED : ஜன 04, 2026 06:25 AM
ADDED : ஜன 04, 2026 03:37 AM

மதுரை: ''சுசீந்திரம் கோயிலில் 'பாரத் மாதா கி ஜே' என கோஷமிட்ட பக்தர்களை அவமதித்த அமைச்சர் சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும். கோயில்கள் ஒன்றும் தி.மு.க.,வின் அண்ணா அறிவாலயம் அல்ல'' என ஹிந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலைகண்ணன் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் கோயில் தேரோட்டத்தில் 'பாரத் மாதா கி ஜே, ஓம் காளி ஜெய் காளி' என்று பல ஆண்டுகளாக சொல்லிக் கொண்டுதான் வடத்தை இழுப்பார்கள். இந்தாண்டும் வழக்கம் போல் கோஷமிட, கடுப்பான அமைச்சர் சேகர்பாபு 'நீங்கள் எல்லாம் சோறு தின்கிறீர்களா...' என மனம் புண்படும்படி, அவமதித்து திட்டியதை கண்டிக்கிறோம். அமைச்சர் ரவுடி போல நடந்து கொள்வது அரசியல் பண்பாட்டுக்கும், ஆன்மிக மரபுக்கும் அவமானம்.
வீரசிவாஜி, வீரசாவர்க்கர் என்று கோஷமிட்டனர் என்று ஆதாரம் இன்றி பொய்யான தகவலை அமைச்சர்கள் பரப்புகிறார்கள். அப்படியே கோஷம் போட்டாலும் என்ன தவறு இருக்கிறது. கோயிலை காக்க போராடிய தலைவர்களின் பெயரை தானே வழிபாட்டு தலங்களில் போற்றுகிறோம். கோயில்கள் ஒன்றும் அண்ணா அறிவாலயம் அல்ல.
சமீபகாலமாக திருச்செந்துார் உட்பட செல்லும் இடங்களில் எல்லாம் பக்தர்களை சேகர்பாபு அவமதித்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்பாக முன்னாள் கவர்னர் தமிழிசையையும், அர்ஜுன்சம்பத்தையும் ஒருமையில் சேகர்பாபு பேச என்ன தகுதி இருக்கிறது. காவி வேட்டி, நெற்றியில் பட்டை அடித்தால் மட்டும் போதாது. அதிகார துஷ்பிரயோகம் செய்யக்கூடாது. அது அமைச்சர் பதவிக்கு அழகல்ல.
இத்தனை ஆண்டுகளாக நடந்த தேரோட்டத்திற்கு வராத சேகர்பாபு இந்தாண்டு மட்டும் வரக்காரணம் தேர்தல்தான். பக்தர்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு கூறினார்.

